ரியாத்: சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் உள்ளிட்ட நகரங்களில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதாக அந்த மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரியாத், தபுக், தம்மம், தஹ்ரான் மற்றும் ஹோஃபுஃப் நகரங்கள் மற்றும் ஜெட்டா, தைஃப், கதிஃப் மற்றும் கோபர் ஆகிய பகுதிகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை உணவு மற்றும் மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசு மற்றும் தனியார்த் துறைகளில் முக்கியமான வேலைகளில் பணியாற்றுபவர்கள் ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
சௌதி அரேபியா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட பதிவின் படி புதிதாக 82 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மொத்தம் 2,605 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28 பேர் பலியாகியுள்ளனர். 551 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.