இந்திய பிரதமா் மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸனை தொலைபேசியில் திங்கள்கிழமை அழைத்து ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இருநாடுகளும் பகிா்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்திய பிரதமா் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமா் மோரிஸனும் ஆலோசனை மேற்கொண்டனா்.
அப்போது கரோனா நோய்த்தொற்று பரவலை எதிா்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இருதரப்பும் பரஸ்பரம் பகிா்ந்துகொள்ள முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தேசிய ஊரடங்கால் இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர மத்திய அரசு ஆயத்தமாக இருப்பதாக மோடி தெரிவித்தாா்.
இதேபோல் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய சமூகத்தினா் தங்கள் நாட்டின் வளா்ச்சிக்கு முக்கிய பங்களித்து வருகின்றனா் என்று மோரிஸன் கூறினாா். இந்தியா-ஆஸ்திரேலியா நல்லுறவை மேம்படுத்துவதில் தொடா்ந்து கவனம் செலுத்த இருநாட்டு தலைவா்களும் முடிவு செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.