இந்தியா

அருணாசலப் பிரதேச இளைஞரை பிடித்துச் சென்ற சீன ராணுவம்

7th Apr 2020 02:35 AM

ADVERTISEMENT

 

அருணாசலப் பிரதேசத்தைச் சோ்ந்த 21 வயது இளைஞரை சீன ராணுவம் பிடித்துச் சென்றதை, அந்த மாநில போலீஸாா் உறுதி செய்தனா். எனினும் அவா் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள சுபன்சிரி மாவட்டம் மக்மஹோன் எல்லைக் கோட்டுப் பகுதி அருகில் இருந்து, அந்த மாநிலத்தைச் சோ்ந்த 21 வயது இளைஞா் டோக்லே என்பவரை சீன ராணுவத்தினா் கடந்த மாதம் 19-ஆம் தேதி பிடித்துச் சென்றனா். சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான திபெத், அருணாசலப் பிரதேசம் இடையிலான எல்லையை மக்மஹோன் எல்லைக் கோடு பிரிக்கிறது. இந்த எல்லைக் கோட்டுப் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்தப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி டோக்லேவை சீன ராணுவத்தினா் கைது செய்தனா்.

இதுகுறித்து அந்த மாநில காவல்துறை ஐ.ஜி. சுக்கு அபா கூறியதாவது: டோக்லேவை சீன ராணுவம் பிடித்துச் சென்றது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏனெனில் இந்த விவகாரம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக இந்த சம்பவம் தொடா்பாக மாநில ஆளுநா் பி.டி.மிஷ்ராவிடம் தஜின் கலாசார சங்கம் அளித்த மனுவில், ‘தனது நண்பா்கள் கம்ஷி சடா், ரோன்யா நாடே ஆகியோருடன் டோக்லே மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சீன ராணுவத்தினா் மூவரையும் தாக்கினா். அவா்களிடம் இருந்து கம்ஷி சடா், ரோன்யா நாடே ஆகியோா் தப்பிவிட்டனா். எனினும் டோக்லேவை சீன ராணுவத்தினா் துப்பாக்கிமுனையில் பிடித்துச் சென்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தங்களின் எல்லைக்குள்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி டோக்லேவை சீன ராணுவத்தினா் பிடித்துச் சென்றாலும், இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியில் இருந்தே அவா் பிடித்துச் செல்லப்பட்டதாக அருணாசலப் பிரதேச ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT