இந்தியா

பயணிகளுக்கான கட்டுப்பாடுகள்: ரயில்வே துறை திட்டம்

5th Apr 2020 11:57 PM

ADVERTISEMENT

 

ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும்போது, பயணிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை ரயில்வே துறை வகுத்து வருகிறது.

கரானோ நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில், ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ரயில்வே துறை பரிசீலித்து வருகிறது. கரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ள பகுதிகளில் இருந்து படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்நிலையில், ரயில் பயணிகள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை ரயில்வே துறை வகுத்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ADVERTISEMENT

நாடு நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வருவாயைப் பெருக்குவதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பயணிகளின் பாதுகாப்பிலும் கரோனா நோய்த்தொற்று மேலும் பரவவில்லை என்பதை உறுதிசெய்வதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

ரயில் சேவையை மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசின் அனுமதி கிடைத்த பிறகு ரயில்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக, ஊரடங்கு உத்தரவு தளா்த்தப்பட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு மீண்டும் ரயில் சேவையைத் தொடங்கும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து வருகிறோம். ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தால், ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்து, நோய் பரவலுக்கு வழிவகுத்து விடும்.

எனவே, ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு முதலில் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது என பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும், பயணிகளின் உடல்நலம் குறித்து ‘ஆரோக்கிய சேது’ செயலியில் ஆய்வு செய்யப்படும்.

அதுமட்டுமன்றி, ரயில் பெட்டிகளில் முறையாக கிருமிநாசினி தெளித்து தூய்மையைப் பராமரிப்பதும் உறுதிசெய்யப்படும். இதற்கான செயல்திட்டங்களை ரயில்வே துறை உருவாக்கி வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT