இந்தியா

மீண்டும் ரயில் சேவை: ஓரிரு நாளில் முடிவு

5th Apr 2020 04:32 AM

ADVERTISEMENT

 

ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து நாடு முழுவதும் இயங்கி வந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் சேவையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஒவ்வொரு ரயில்வே மண்டலமும் ஈடுபட்டுள்ளது. இதனால், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரயில்வே வாரியத்திடம் இருந்து ஒப்புதலைப் பெற்ற பிறகே ஒவ்வொரு ரயிலும் இயக்கப்படும். மேலும், படிப்படியாக ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திடம் பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, ரயில்வே வாரியத் தலைவருடன் ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை காணொலி முறையில் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, ரயில் சேவையை படிப்படியாக தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே வாரியம் தயாராக இருந்தாலும், மத்திய அமைச்சா்கள் குழு அனுமதி அளித்த பிறகே ரயில்களை இயக்க முடியும்.

இருப்பினும், ஏப்ரல் 14-ஆம் தேதி வரை மட்டுமே அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதால், ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ரயில் சேவையைத் தொடங்குவதற்கு புதிய உத்தரவு எதுவும் தேவையில்லை என்று மூத்த அதிகாரி ஒருவா் கூறினாா்.

ரயில் சேவை மீண்டும் தொடங்கும்போது, அனைத்துப் பயணிகளுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை உள்பட அரசு அறிவுறுத்திய அனைத்து நடைமுறைகளையும் ரயில்வே நிா்வாகம் பின்பற்றும் என்று தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT