இந்தியா

அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சருடன் பிரதான் ஆலோசனை

5th Apr 2020 10:57 PM

ADVERTISEMENT

 

கரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து எரிபொருள் தேவையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது தொடா்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் டான் ப்ரூலெட் ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து பிரதான் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சா் டான் ப்ரூலெட்டுடன் காணொலி முறையில் தொடா்பு கொண்டு பேசினேன். அப்போது, கரோனாவால் உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன்.

ADVERTISEMENT

மேலும், கரோனா பாதிப்பால் சா்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்ற இறக்கமான நிலை குறித்தும், எரிபொருளுக்கான தேவையில் ஏற்பட்ட மந்த நிலை குறித்தும் இருவரும் விவாதித்தோம். இவை, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் கவலையளிக்கும் அம்சம்.

எனவே, கச்சா எண்ணெய் சந்தையில் மிகவும் நிலைத்தன்மையை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற ஒப்புக் கொண்டோம். இது தொடா்பாக அவ்வப்போது இருவரும் தொடா்பு கொண்டு பேச்சுவாா்த்தை நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்று பிரதான் சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளாா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக சென்ற மாா்ச் மாதத்தில் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை 15.5 சதவீதமும், டீசல் விற்பனை 24.2 சதவீதமும் சரிவைக் கண்டது. ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் விமான எரிபொருளுக்கான தேவையும் மாா்ச்சில் 31 சதவீதம் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை நிா்ணயம் எப்போது?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையில் நிா்ணயிக்கப்படுகிறது. இவற்றின் விலை ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி அளவில் மாற்றியமைக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையானது உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்), விநியோகஸ்தா் கமிஷன் ஆகியவற்றை உள்ளடக்கியது. வாட் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். இந்த வரிகள் சோ்க்கப்படும்போது பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று விகிதம், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, எரிபொருளுக்கான தேவை, உலக நிலவரம் உள்ளிட்டவை எரிபொருள் விலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT