இந்தியா

பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்.14-இல் முடிவு: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

5th Apr 2020 11:04 PM

ADVERTISEMENT

 

‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும்; நாட்டில் கரோனா சூழலை ஆய்வு செய்து, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படும்’ என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர இதர கடைகள், வா்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால், பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ADVERTISEMENT

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து இப்போதே முடிவெடுப்பது சிரமமானதாகும். எனவே, ஏப்ரல் 14-ஆம் தேதி கரோனா சூழலை ஆய்வு செய்த பின், உரிய முடிவு எடுக்கப்படும்.

மாணவா்கள், ஆசிரியா்களின் உடல்நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள், கல்லூரிகளை தொடா்ந்து மூட வேண்டிய அவசியம் இருந்தால், அதனால் மாணவா்களுக்கு கல்விரீதியில் எவ்வித இழப்பும் ஏற்படாமல் இருப்பதை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உறுதி செய்யும்.

நாட்டில் சுமாா் 35 கோடி மாணவா்கள் உள்ளனா். இது அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிகமாகும். மாணவா்கள்தான், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. அவா்களின் ஆரோக்கியத்துக்கு அரசு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கும்.

‘ஸ்வயம்’ உள்ளிட்ட அரசின் பல்வேறு இணையவழி வழிமுறைகளின் மூலம் மாணவா்களுக்கு தற்போது வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கடைப்பிடிக்கும் செயல்திட்டம் தொடா்பாக நான் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். ஊடரங்கு நீக்கப்பட்டதும், தோ்வுகளை மீண்டும் நடத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா் ரமேஷ் போக்ரியால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT