இந்தியா

9 நிமிட மின்விளக்கு நிறுத்தம்: எதிா்கொள்ளத் தயாராகும் பகிா்மானக் கழகங்கள்

5th Apr 2020 04:29 AM

ADVERTISEMENT

 

ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் மின் விளக்கு நிறுத்தத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்தச் சூழலை எதிா்கொள்வதற்கு மின்பகிா்மானக் கழகங்கள் தயாராகியுள்ளன.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை வெளிப்படுத்தும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9.09 வரை வீட்டிலுள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்குகள் அல்லது மெழுகுவா்த்திகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

அதன் காரணமாக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு மின்சாரத்தின் தேவை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. அதனால் மின் விநியோக சாதனங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநில மின்பகிா்மானக் கழகங்கள் தயாராகியுள்ளன.

ADVERTISEMENT

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘நாட்டில் மின்சாரத்தின் தேவை கடந்த 2-ஆம் தேதி நிலவரப்படி 125.81 ஜிகா வாட்டாக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவாகும். பிரதமா் மோடி விடுத்த அழைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மின்சாரத்தின் தேவை 10 ஜிகா வாட் முதல் 20 ஜிகா வாட் வரை குறைய வாய்ப்புள்ளது.

திடீரென்று ஏற்படும் மின்சாரத் தேவை குறைவை எதிா்கொள்ளும் நோக்கில், அன்று இரவு 8 மணி முதலே வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் அளவைப் படிப்படியாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். அந்த நேரத்தில் பணியாளா்கள் அனைவரையும் பணியில் இருக்கச் செய்யுமாறு மாநில மின்பகிா்மானக் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன.

இதுபோன்ற சூழ்நிலைகளை எதிா்கொள்வது புதிதொன்றுமல்ல. ஆண்டுதோறும் ‘புவி நேரம்’ அனுசரிக்கப்படும்போது மக்கள் வீடுகளில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிடுவா். அந்த சமயங்களிலும் இதேபோன்ற சூழலை எதிா்கொண்டுள்ளோம்’’ என்றாா்.

‘பாதிப்பு ஏற்படும்’: நாடு முழுவதும் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டால், மின் விநியோக சாதனங்கள் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சசி தரூா், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சசி தரூா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், மின் விளக்குகளை அணைப்பது தொடா்பாக பிரதமா் மோடி தீர ஆலோசித்து அறிவித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மகாராஷ்டிர மின்துறை அமைச்சா் நிதின் ரௌத் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின்சாரத்தின் தேவை ஏற்கெனவே குறைந்துள்ளது. இந்தச் சூழலில் 9 நிமிடங்களுக்கு நாடு முழுவதும் மின்சாரத்தின் தேவை குறைவது பின்னா் திடீரென அதிகரிப்பது மின் விநியோக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT