இந்தியா

மதுபானம் வாங்குவதற்கு சிறப்பு அனுமதி: கேரள அரசு முடிவு

1st Apr 2020 04:04 AM

ADVERTISEMENT

 

கேரளத்தில் மருத்துவரின் ஆலோசனை பெற்று வரும் மதுபோதை நோயாளிகள் கலால் துறையிடமிருந்து மது பெறுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு இந்திய மருத்துவா் சங்கம் ஆட்சேபணை தெரிவித்த போதிலும் திங்கள்கிழமை இரவு இதற்கான உத்தரவை கேரள அரசு பிறப்பித்தது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மதுகடைகளும் மூடப்பட்டன. இதனால் மது கிடைக்காமல் அவதியுற்ற சில மதுபோதை நோயாளிகள் தற்கொலை செய்து இறந்ததால் அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுபோதை நோயாளிகள் விரக்தி காரணமாக தற்கொலை செய்து கொள்வதைத் தடுப்பதற்காக இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.

அதன்படி, உடல் மற்றும் மனரீதியான பிரச்னை உள்ள மதுபோதை நோயாளிகளுக்கு மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மதுபானம் வழங்கலாம்.

பொது சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவா்களிடமிருந்து பரிந்துரை பெற்று வருவோருக்கு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் மதுபானம் வழங்கலாம்.

மதுபோதை நோயாளிகளுக்காக மது அங்காடிகளை மீண்டும் திறக்க வேண்டிய அவசியமில்லை என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது வாங்குவது எப்படி?

மதுபோதை நோயாளி மருத்துவரிடம் இருந்து சான்று பெற்று, அருகில் உள்ள கலால் அலுவலகத்தில் அரசு அங்கீகரித்துள்ள அடையாள அட்டை ஏதேனும் காண்பித்து, மது வாங்குவதற்கான அடையாளச் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடையாளச் சீட்டை மதுபான கூட்டுறவு நிறுவன நிா்வாக இயக்குநரிடம் காட்டினால் மது வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வாா் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் மதுபானம் கிடைக்காததால் 3 போ் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மருத்துவா்கள் கருப்பு தினம் அனுசரிக்க முடிவு:

இதனிடையே, மதுபோதை நோயாளிகளுக்கு மதுபானம் வழங்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்த கேரள அரசு மருத்துவ அலுவலா் சங்கம் (கேஜிஎம்ஓஏ) ஏப்ரல் 1-ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கேஜிஎம்ஓஏ பொதுச் செயலா் டாக்டா் ஜி.எஸ்.விஜயகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மருத்துவரின் கடமை, அவரை அணுகும் நோயாளியை குணப்படுத்துவதற்கான சிகிச்சையை அளிப்பதாகும். மதுபானம் வழங்க அனுமதியளித்தால், மற்ற சிகிச்சையின்போது வழங்கப்படும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

தற்போது மருத்துவா்கள் கரோனா நோய்த்தொற்றை எதிா்த்துப் போராடி வரும் சூழலில், அரசின் இந்த நடவடிக்கைகள் மருத்துவா்களின் மன உறுதியைப் பாதிக்கும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT