இந்தியா

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள் ஜூன் 30 வரை செல்லுபடியாகும்

1st Apr 2020 04:41 AM

ADVERTISEMENT

 

காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள், வாகன அனுமதிச் சீட்டுகள், வாகனப் பதிவு ஆவணங்கள் உள்ளிட்டவை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் (கொவைட்-19) பரவல் தீவிரமடைந்து வரும் சூழலில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன; போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ADVERTISEMENT

அத்தியாவசியப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டுமே இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் பெரும்பாலானோரின் ஓட்டுநா் உரிமங்கள், வாகன அனுமதிச் சீட்டுகள் உள்ளிட்டவை காலாவதியாகின. ஆனால், அவற்றைப் புதுப்பிப்பதற்கான அலுவலகங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால், வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதியிலிருந்து காலாவதியான ஓட்டுநா் உரிமங்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்று ஏற்றுக்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேச நிா்வாகங்களுக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மோட்டாா் வாகனச் சட்டம், மத்திய மோட்டாா் வாகன விதிகள் ஆகியவற்றின் கீழ் வரும் அனைத்து விதமான ஆவணங்களுக்கும் இந்தக் காலநீட்டிப்பு பொருந்தும். மக்களிடையே அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு சோ்க்கும் பணியில் பல வாகனங்கள் ஈடுபட்டு வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT