இந்தியா

கரோனா பாதித்து உயிரிழந்தால் மருத்துவப் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி: அரவிந்த் கேஜரிவால்

1st Apr 2020 04:27 PM

ADVERTISEMENT

புது தில்லி: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியின் போது மருத்துவப் பணியாளர்கள் யாரேனும் உயிரிழக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று காணொலி காட்சி மூலம் பேசிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், எல்லையில் போரிடும் ராணுவ வீரர்களுக்கு இணையானவர்கள் மருத்துவப் பணியாளர்கள் என்று கூறினார்.

மேலும், பணியின் போது மரணம் அடையும் பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி அளிப்பதைப்போல, கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துணைப் பணியாளர்கள், மருத்துவமனையில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் யாரேனும் கரோனா பாதித்து உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கும் தில்லி அரசு ரூ.1 கோடி வழங்கும் என்று கேஜரிவால் தெரிவித்தார்.

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் நீங்கள் மேற்கொள்ளும் சிறப்பான பணிக்கு இந்த நிதி எந்த வகையிலும் இணையாகாது. எனினும், நீங்கள் செய்யும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் தில்லி அரசு இந்த அறிவிப்பை வெளியிடுகிறது என்றும் தில்லி முதல்வர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

ஒருவர் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவரோ அல்லது அரசு மருத்துவமனையைச் சேர்ந்தவரோ அது ஒரு பொருட்டே அல்ல.  மருத்துவப் பணியாளர்களின் சேவையை அங்கீகரித்து மரணம் அடையும் மருத்துவப் பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றும் 3 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் முதல்வர் இந்த அறிவிப்பை  வெளியிட்டுள்ளார். தில்லியில் தற்போது 120 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT