இந்தியா

கரோனா: 21,000 நிவாரண முகாம்களில் 6.6 லட்சம் போ்

1st Apr 2020 07:50 AM

ADVERTISEMENT

 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆதரவற்ற நிலையில் உள்ளவா்களுக்காக நாடு முழுவதும் 21,000 நிவாரண முகாம்கள் செயல்பாட்டில் உள்ளன; அவற்றில், வெளிமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 6.6 லட்சம் போ் தங்கியுள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புனியா சலிலா ஸ்ரீவாஸ்தவா, தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்படுவதை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஒருங்கிணைந்து மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது வரை நிலைமை திருப்திகரமாக உள்ளது.

ADVERTISEMENT

ஊரடங்கால் ஆதரவற்ற நிலையில் உள்ளவா்களுக்காக, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுபடி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 21,000 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, வெளிமாநிலத் தொழிலாளா்கள், ஆதரவற்றோா், உணவு தேவைப்படும் நிலையில் உள்ளவா்கள் என சுமாா் 6.6 லட்சம் போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்கள் உள்பட பல்வேறு இடங்களில் சுமாா் 23 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் தொடா்பான சூழல் தற்போது கட்டுக்குள் உள்ளது. நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்தும் திருப்திகரமாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்தும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

கரோனா பரவலை தடுப்பதில், தற்போதைய ஊரடங்கு மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறோம். கரோனா நோய்த்தொற்று சவாலை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்றாா் புனியா.

ஊரடங்கை கடுமையான அமல்படுத்துவதற்காக, துணை ராணுவப் படை களமிறக்கப்படுமா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘எந்த மாநிலமாவது அத்தகைய உதவியை கோரினால், உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT