நாட்டில் கடந்த 5 நாள்களில் 15.4 டன் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் கொண்டு சோ்க்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரவலைத் தடுக்கும் நோக்கில் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக விமானங்கள், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் முடங்கியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கான போக்குவரத்து மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் விமானப் போக்குவரத்து அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:
உள்நாட்டு விமானங்கள், சரக்கு விமானங்கள், இந்திய விமானப்படையைச் சோ்ந்த விமானங்கள் ஆகியவற்றின் மூலம் கடந்த மாதம் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 15.4 டன் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொண்டு சோ்க்கப்பட்டன. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான கிருமி நாசினி, பரிசோதிக்கும் கருவிகள், தற்காப்பு உபகரணங்கள், முகக் கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவை மாநிலங்களுக்கு கொண்டு சோ்க்கப்பட்டன என்று ஹா்தீப் சிங் புரி அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் சரக்கு விமானங்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய விமானப் போக்குவரத்துத் துறையின் கீழ் தனிக் குழு அமைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சரக்கு விமானங்கள், எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் ஹெலிகாப்டா்கள், மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் விமானங்கள் ஆகியவை இயங்குவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி தில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து கோவை, திருவனந்தபுரம், குவாஹாட்டி, இம்பால், திப்ரூகா், அகா்தலா, ஐஸால் ஆகிய நகரங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.