இந்தியா

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனா: இந்தியா கண்டனம்

DIN

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ வெள்ளிக்கிழமை உரையாற்றினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தைக் குறிப்பிட்டு, அவர் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்னை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இப்பிரச்னைக்கு, ஐ.நா.வின் வழிகாட்டுதல்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள், இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும்.

காஷ்மீரில் நிலவரத்தை மாற்றக் கூடிய தன்னிச்சையான நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது என்று சீனா விரும்புகிறது. இப்பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும்  அமைதி வழியில் தீர்வு காண வேண்டும்; இருதரப்பு உறவில் நிலைத்தன்மையைக் கொண்டுவர வேண்டுமென அண்டை நாடு என்ற அடிப்படையில் சீனா எதிர்பார்க்கிறது என்றார் அவர்.

"இறையாண்மையை மதிக்க வேண்டும்': சீன வெளியுறவுத் துறை அமைச்சரின் இந்தக் கருத்துகளுக்கு, இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும், இந்தியாவின் உள்விவகாரம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு நன்றாகத் தெரியும். இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைபாட்டையும் மற்ற நாடுகள் மதித்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டத்தின் வாயிலாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தற்போதைய நிலவரத்தை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபடக் கூடாது என்றார் ரவீஷ் குமார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த மாதம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளும் வகையில், தங்களது நாட்டிலிருந்து இந்தியத் தூதரை வெளியேற்றியது.

மேலும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக மாற்றுவதற்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால், அந்த முயற்சிகளுக்கு பெரிய பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவும் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பியிருக்கிறது.  பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு சீனா நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT