இந்தியா

நாரதா ரகசிய நடவடிக்கை வழக்கு: சிபிஐ முன் முகுல் ராய் ஆஜர்

29th Sep 2019 02:16 AM

ADVERTISEMENT

நாரதா ரகசிய நடவடிக்கை வழக்கு விசாரணைக்காக, பாஜக மூத்த தலைவர் முகுல் ராய், கொல்கத்தாவில் சிபிஐ முன் சனிக்கிழமை ஆஜரானார்.
இந்த வழக்கு விசாரணைக்காக, சிபிஐ முன் வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சில நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்க இருப்பதைக் குறிப்பிட்டு, வெள்ளிக்கிழமை தன்னால் ஆஜராக இயலாது என்று முகுல் ராய் பதிலளித்தார். கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சிபிஐ முன் சனிக்கிழமை ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ தலைமையகத்துக்கு சனிக்கிழமை மதியம் 2.15 மணிக்கு முகுல் ராய் வந்தார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு, நாரதா செய்தி இணையதளம் சில விடியோ காட்சிகளை வெளியிட்டது. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலின்போது வெளியான அந்த விடியோ காட்சிகள், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அந்த விடியோ காட்சிகளில், ஒரு நிறுவனத்துக்கு உதவுவதற்காக, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த விடியோ காட்சிகள், ரகசிய நடவடிக்கைகள் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த காலகட்டத்தில் முகுல் ராய், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2017-இல் கட்சியில் இருந்து விலகினார். பின்னர், பாஜகவில் இணைந்தார்.
நாரதா ரகசிய விசாரணை வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி மிர்சாவை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT