இந்தியா

மதிப்பீட்டாளர் இல்லாததால் கேள்விக்குறியாகும் தேவஸ்தான நகைகளின் பாதுகாப்பு

22nd Sep 2019 11:54 PM | எம். ஆர். சுரேஷ்குமார்

ADVERTISEMENT

 

திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திலிருந்து, வெள்ளி கீரிடங்கள், தங்க நகைகள் மற்றும் சில பொருட்கள் மாயமானதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகியது. அதனால், தேவஸ்தான கருவூலத்தில் உள்ள நகைகள் அனைத்தையும் மதிப்பிட்டு, தணிக்கை செய்வதற்கு செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் உத்திரவிட்டார். அதன்படி, ஒரு வாரத்திற்கு முன் தணிக்கைகள் துவங்கியது. அதில், கருவூலத்தில் உள்ள நகைகளின் விவரங்கள் தெரிய வருவதற்கு முன், தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள குறைகள் வெளிவர துவங்கியுள்ளது.

திருமலை ஏழுமலையான் காணிக்கை உண்டியல் மூலம் கிடைக்கும் தங்கம், வெள்ளி நகைகள் தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாதத்திற்கு இருமுறை உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவு வழியாக, கருவூலத்திற்கு இதுபோல், 100க்கும் மேற்பட்ட தங்கம், வெள்ளி நகைகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால், கருவூலத்தில் நிலுவை அதிகரிக்கும் சமயங்களில், பழைய நகைகள் உருக்குவதற்காக தங்க சாலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆயினும், அவற்றின் எடை, வடிவம் அனைத்தும் பதிவேட்டில் பதிய வேண்டியது கட்டாயம்.

மேலும், தங்க நகைகள் விஷயத்திற்கு வந்தால், வைரம் பதித்த நகைகள், முத்துகள், பவளம், உள்ளிட்ட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என பல பிரிவுகளில் பிரிக்கப்பட்டு, பதிவேட்டில் வரவு வைக்கப்படுகிறது. 

ADVERTISEMENT

அதேபோல், வெள்ளி பொருட்கள் விஷயத்திற்கு வந்தால், 15 வகைகளில் அவை பிரிக்கப்படுகிறது. அவ்வாறு பிரித்து, அவற்றின் மதிப்பை தனித்தனியே பதிவேட்டில் குறிக்க வேண்டும்.

இவையனைத்தும், மதிப்பீட்டாளர் முன்னிலையில் நடக்க வேண்டும். ஆயிரம் மற்றும் நுôற்றுக்கணக்கான நகைகள் மற்றும் பொருள்களைப் பிரித்து, மதிப்பிட்டு, பதிவேட்டில் குறிக்க குறைந்தது, 10 மதிப்பீட்டாளர்களாவது தேவை. ஆனால், தேவஸ்தானத்தில் ஒரே ஒரு மதிப்பீட்டாளர் மட்டுமே உள்ளார். கடந்த, 10 ஆண்டுகளாக அவர் மட்டுமே இப்பணியில் நீடித்து வருகிறார். 

தேவஸ்தானத்தில் இன்னும், 2 மதிப்பீட்டாளர்கள் உள்ள நிலையில் அவற்றில் ஒருவர் பணியில் கவனக்குறைவாக நடந்து கொண்டதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டு, அன்னதானப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

மற்றொருவரோ உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவில் பணியாற்றி வருகிறார். மேலும், தேவஸ்தானத்தில் மிக முக்கிய பதவிகளில் உள்ளவர்கள், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை துறைமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், மதிப்பீட்டாளர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தேவஸ்தானத்தில் தேவையான அளவில் மதிப்பீட்டாளர்கள் இல்லாத நிலையில், பல துறைகளில் பணியாற்றிய, 4 பேரை தேவஸ்தானம் தேர்ந்தெடுத்து மும்பைக்கு ஜெம்மாலெஜிஸ்ட் படிக்க அனுப்பியது. படித்து முடித்து திரும்பிய அவர்களில், சந்திரபாபு என்பவரை உண்டியல் காணிக்கை கணக்கிடும் பிரிவுக்கு அனுப்பினர். அங்கிருந்து வெளிப்படும் தூசுகளால் தன் உடல்நலம் பாதிக்கப்படுவதாகக் கூறி, மீண்டும் தன்னுடைய துறைக்கே பணியை அவர் மாற்றிக் கொண்டார்.

கல்யாணி, ஜெயசதீஷ் என்ற இருவரும் தங்களால் இந்த பணியை செய்ய முடியாது என்று கூறியதை அடுத்து, தங்களின் துறைகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். சிவரஞ்சனி என்றவர் மட்டுமே, கருவூலத்தில் பணியில் உள்ளார். ஆயினும், அவரை நகைகள் மதிப்பீடு செய்ய அனுமதிக்கவில்லை. 

மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், கருவூலத்திற்கு மதிப்பீட்டாளராக உள்ளவர் மட்டுமே இன்வென்டரி துறைக்கும்(ஆண்டிற்கு ஒருமுறை தேவஸ்தானத்தின் அனைத்துத் துறைகளையும் தணிக்கை செய்யும் துறை) மதிப்பீட்டளராக உள்ளனர். பதிவேட்டில் உள்ள அசையும், அசையா சொத்துகள், கருவூலத்தில் உள்ள ஆபரணங்களின் விவரங்கள் அனைத்தையும் தணிக்கை செய்வது இன்வென்டரி துறை. இருதுறைக்கும் ஒரே மதிப்பீட்டாளர் இருக்கும் பட்சத்தில், எங்கு முறைகேடு நடந்தாலும் அது வெளியில் தெரிய வர வாய்ப்பில்லை. 

அதனால் ஆண்டிற்கு, ரூ. 3 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் நடக்கும் தேவஸ்தானத்தில், பெரிய பெரிய நகை கடைகளில் ஏற்படுத்துவது போல், ஒவ்வொரு நகைக்கும் பார்கோட் மற்றும் டயாகிங் முறையை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால், நகைகள் அனுமதியில்லாமல் கருவூலத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் போது அலாரம் அடிக்கும். நகைகள் மாயமாகும் நிலை ஏற்படாது. 

மேலும், கருவூலத்தின் அதிகாரிகள் மாற்றப்படும் போது அப்பதவியில் வேறொருவரை நியமிக்க தேவஸ்தானம் குறைந்தது, 2 மாத காலம் எடுத்து கொள்கிறது. அச்சமயத்தில், நகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மேலும், அதிகாரிகள் மாற்றப்படும் போது மட்டுமே நகைகளின் தணிக்கை நடக்கிறது. அவ்வாறில்லாமல், தினசரி நகைகளின் தணிக்கை நடத்தப்பட்டால், இதுபோன்ற முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை.

திருமலையின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி, அதி நவீன தொழில்நுட்ப வசதிகளால் பல கட்டங்களில் பாதுகாப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், பக்தர்களின் காணிக்கைகளுக்கும் முழுமையான பாதுகாப்பை தேவஸ்தானம் அளிக்க முன்வர வேண்டும். அதனால், தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி இருவரும், கருவூலத்தின் மீது கவனத்தை திருப்பி அங்கு அதிநவீன தொழில்நுட்பத்தை ஏற்படுத்தி, பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் ஆபரணங்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும், என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT