இந்தியா

தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி. சிவபிரசாத் மறைவு

22nd Sep 2019 02:26 AM

ADVERTISEMENT

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான என். சிவபிரசாத் (68), உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வசித்து வந்த சிவபிரசாத், கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.
 சில நாள்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு வியாழக்கிழமை மாற்றப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை சிவபிரசாத் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், சித்தூர்(தனித்தொகுதி) மக்களவைத் தொகுதியில் இருந்து கடந்த 2009-ஆம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவபிரசாத், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், மாநில தகவல்தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2013-14 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதையடுத்து ஆந்திரத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பின்னர், ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, நாடாளுமன்றம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.  சிவபெருமான், அம்பேத்கர் என தினமும் விதவிதமான கதாபாத்திர வடிவில் ஆடை அலங்காரம் செய்து விநோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
மருத்துவப்படிப்பு பயின்ற அவர், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர், பல தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த வில்லன் என்ற பிரிவில் ஆந்திர அரசின் "நந்தி' விருதைப் பெற்றுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்: சிவபிரசாத் மறைவுக்கு ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறுகையில், "எனது நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன். ஆந்திரத்தின் உரிமைகளைப் பெறுவதற்காக அயராது போராடியவர். அவரது மறைவு, மாநிலத்துக்கு மிகப்பெரிய இழப்பு' என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT