இந்தியா

கர்நாடகம்: 15 பேரவைத் தொகுதிகளுக்கு அக். 21- இல் இடைத் தேர்தல்

22nd Sep 2019 02:22 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் 17 எம்எல்ஏக்கள் மட்டும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 15 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத் தேர்தல் வாக்குப் பதிவு அக். 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே, 17 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்எல்ஏ பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 
224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 17 எம்எல்ஏக்களின் பதவியை தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து, பாஜகவின் பலம் 105, காங்கிரஸின் பலம் 66, மஜதவின் பலம் 34-ஆகக் குறைந்தது.  இக் கட்சிகளைத் தவிர, பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சுயேச்சைக்கும் தலா ஓர் இடம் உள்ளது. 207 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 104 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்பதால்,  எடியூரப்பா தலைமையில்
 பாஜக அரசு அமைக்கப்பட்டது. 
எதிர்த்து வழக்கு: இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை கடந்த 3 மாதங்களாக நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த விசாரணை செப். 23-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இடைத்தேர்தல்: இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 15 தொகுதிகளில் மட்டும் அக். 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்போவதாக இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால்,  மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தவில்லை.
அந்த இரண்டு தொகுதிகள் நீங்கலாக, அத்தானி, காக்வாட், கோகாக், எல்லாபுரா, ஹிரேகேரூர், ரானிபென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லேஅவுட், சிவாஜி நகர், ஹொசபேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
முக்கியத்துவம்: 224 பேர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 105 இடங்கள் உள்ளன.  ஒரு சுயேச்சை எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளார்.  அப்படியானால்,  பாஜகவின் பலம் 106-ஆக உள்ளது. அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற பாஜகவுக்கு இன்னும் 7 இடங்கள் தேவைப்படுகின்றன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT