இந்தியா

காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் கடத்தல்: ஜெய்ஷ் ஆதரவாளர்கள் இருவர் கைது

22nd Sep 2019 01:10 AM

ADVERTISEMENT

 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு ஆயுதங்களைக் கடத்தியது தொடர்பாக, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக, காவல் துறை அதிகாரிகள் ஜம்முவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அட்டைப் பெட்டிகளுடன் கடந்த வியாழக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்றை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அதில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மூன்று பேர் பதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், அவர்களிடம் ஏகே-56, ஏகே-47 ரக துப்பாக்கிகளும், 180 துப்பாக்கிக் குண்டுகளும் இருந்தன.

ADVERTISEMENT

இதையடுத்து, அவர்கள் மூவரையும் வாகன ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த இருவரை புல்வாமா மாவட்டத்தில் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

அவர்களில் வாகனத்தின் உரிமையாளரும் ஒருவராவார். பஞ்சாபிலிருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்தும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT