இந்தியா

குழந்தை கடத்தல் வதந்தியால் மோதல்: ஒருவர் பலி

22nd Sep 2019 01:07 AM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம், பதோஹி மாவட்டத்தில் குழந்தையை கடத்தியதாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: பதோஹி மாவட்டத்தின் காந்தி கிராமம் அருகே மாற்றுத் திறனாளி ஒருவரின் வாகனத்தின்மீது வெள்ளிக்கிழமை இரவு டிராக்டர் ஒன்று மோதியது. அதைக் கண்ட கிராமவாசிகள், அந்த டிராக்டரில் உள்ளவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதனால் அந்த இடத்தில் இருந்து டிராக்டரை எடுத்துக் கொண்டு தப்பிக்க ஓட்டுநர் முயற்சி செய்தார்.  இந்நிலையில், அந்த டிராக்டரில் உள்ளவர்கள் குழந்தையைக் கடத்திச் செல்வதாக கிராமத்தில் இருந்த மற்றவர்களுக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இந்த வதந்தி பரவியதால், கிராமத்தினர் பலர், இரு சக்கர வாகனத்தில் அந்த டிராக்டரைத் துரத்திச் சென்றனர். 
டிராக்டரை வேகமாக ஓட்டிய ஓட்டுநர், விரைவில் அவரது கிராமத்தை சென்றடைந்தார். பக்கத்து கிராம மக்கள் துரத்தி வருவதைக் கண்ட உள்ளூர் மக்கள், டிராக்டரில் இருந்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அதையடுத்து, இரு கிராம மக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். டிராக்டரில் வந்தவர்களைக் கடுமையாக தாக்கிவிட்டு, காந்தி கிராம மக்கள் தப்பித்து விட்டனர். இந்த மோதலில் டிராக்டரில் வந்த ஒருவர் உயிரிழந்தார்.  4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT