இந்தியா

சாரதா நிதி மோசடி வழக்கு: ராஜீவ்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் மறுப்பு

22nd Sep 2019 02:31 AM

ADVERTISEMENT

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ராஜீவ்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க அலிப்பூர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் சனிக்கிழமை மறுத்துவிட்டது.
முன்னதாக, அவருக்கு முன்ஜாமீன் வழங்க கொல்கத்தா நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்து விட்டது. மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் அவரைக் கைது செய்வதற்கு சிபிஐக்கு பிடியாணை தேவை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தின் அலிப்பூர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ராஜீவ்குமார் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சுஜோய் சென்குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அழைப்பாணைகளைத் தவிர்ப்பதன் மூலம் ராஜீவ்குமார் சட்டத்தை மீறுவதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. ராஜீவ்குமாரின் பெயர் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இல்லை என்று அவரது வழக்குரைஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜீவ்குமாரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சிபிஐ தீவிர முயற்சி: ராஜீவ்குமாரின் இருக்குமிடத்தைக் கண்டறிவதற்காக சிபிஐ அமைப்பின் சிறப்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், கொல்கத்தாவில் உள்ள மாநில காவல்துறை சிஐடி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். அதே போல் நகரின் வேறு பல பகுதிகளிலும் அவரை சிபிஐ அதிகாரிகள் தேடிச் சென்றனர்.
மேலும், ராஜீவ்குமாரைத் தேடி 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அவர்கள் சென்றனர். எனினும், அவர் இருக்குமிடத்தைக் கண்டறிய முடியவில்லை.
சாரதா நிதி நிறுவன மோசடி புகார்களை மேற்கு வங்க அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு முதலில் விசாரித்து வந்தது. அந்தக் குழுவில் இருந்த ராஜீவ்குமார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகவும், சாரதா நிதி நிறுவன மோசடி குறித்தும் சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது.  
இந்நிலையில், இந்த வழக்கில், ராஜீவ்குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, வழக்கு விசாரணைக்கு  நேரில் ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு ஏற்கெனவே இருமுறை சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. 
அதனால், ராஜீவ் குமாரின் இருப்பிடத்தைக் கண்டறிய சிபிஐ சிறப்பு குழு அமைத்து தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களுக்கு ராஜீவ் குமாரை தேடி சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சென்றனர். அதையடுத்து வெள்ளிக்கிழமை சிபிஐ முன் ஆஜராகுமாறு ராஜீவ்குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், 3-ஆவது முறையாகவும் அவர் ஆஜராகவில்லை.
முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி கோரி மேற்கு வங்கத்தின் அலிப்பூர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT