என்னைத் தாக்கியவர்களுக்கு மனநல மருத்துவம் தேவை: மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் என்று மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ
என்னைத் தாக்கியவர்களுக்கு மனநல மருத்துவம் தேவை: மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ


மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர்கள் என்று மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தாக்குதல் தொடர்பான படங்களை சுட்டுரை (டுவிட்டரில்) இணைத்து அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கைகள் மூலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் விரைவில் கண்டறியப்படுவார்கள். எனினும், அவர்கள் எந்த விதத்தில் நடந்து கொண்டார்களோ அதே விதத்தில் திருப்பித் தாக்கப்படமாட்டார்கள்.
அதற்குப் பதிலாக, அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான், தாக்குதலில் ஈடுபட்டவர்களும், அவர்களது முரட்டு நண்பர்களும் மாணவர்களைப் போல நடந்து கொள்வது எப்படி என்பதைப்  புரிந்துகொள்வார்கள் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, சுப்ரியோ மீது தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி உறுதியளித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் சார்பு மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு வியாழக்
கிழமை வந்தார்.
எனினும், இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), கலைக்கல்லூரி மாணவர் சங்கம் (ஏஎஃப்எஸ்யு) ஆகிய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். ஒன்றரை மணி நேரம் நீடித்த வாக்குவாதம், பின்னர் தள்ளுமுள்ளானது. பிறகு அவர் பல்கலைக்கழகத்துக்குள் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தி முடித்துவிட்டு அவர் வெளியே வந்தபோதும், அவரது காரை வழிமறித்துக் கொண்டு இடதுசாரி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் அமைச்சர் சுப்ரியோ பாபுல் தாக்கப்பட்டார்.
இந்தச் சூழலில், தனது சுட்டுரைப் பதிவுகளில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com