பெரு நிறுவன வரி 25.17 சதவீதமாக குறைப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும்; இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல்
பெரு நிறுவன வரிக் குறைப்பு தொடர்பாக பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பெரு நிறுவன வரிக் குறைப்பு தொடர்பாக பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.


உள்நாட்டு நிறுவனங்களுக்கான பெரு நிறுவன வரியை (கார்பரேட் வரி) மத்திய அரசு 25.17 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது சுமார் 10 சதவீத வரிக் குறைப்பாகும்; இந்த வரிக் குறைப்பு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருகிறது.

கோவா தலைநகர் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

 இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1.45 லட்சம் கோடி  வருவாய் இழப்பு ஏற்படும். மத்திய அரசின் முடிவை பெரு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.

அமல்படுத்த அவசரச் சட்டம்: வரிக் குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வரிக் குறைப்பு நடவடிக்கை மூலம் நாட்டில் முதலீடு அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சி மேம்படும். இந்த அறிவிப்பால், நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதில் பிரச்னை ஏற்படும் என்பதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அது தொடர்பாக மறுஆய்வு செய்யப்படும். இந்த வரிக் குறைப்பை அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்படும்.

அதேபோல பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளைத் திரும்ப வாங்கிக் கொள்ளும்போது அதற்கு இனி வரி விதிக்கப்படமாட்டாது. பெரிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஈட்டும் வருவாய் மீது  விதிக்கப்பட்டு வரும் கூடுதல் வரி திரும்பப் பெறப்படுகிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும் என்றார்.
இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ள இரு வரிகளும் கடந்த ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில்தான் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி 25.17 % வரி: அடிப்படையில் பெரு நிறுவன வரி இப்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே புதிய நிறுவனங்களுக்கு 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இது நடைமுறையில், பெரு நிறுவனங்களின் வருவாய் மீது இப்போது விதிக்கப்படும் 34.94 சதவீத வரி இனி 25.17 சதவீதமாக (தூய்மை இந்தியா கூடுதல் வரி (செஸ்), கல்விக்கான கூடுதல் வரி ஆகியவை உள்பட) இருக்கும். இது ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பெரு நிறுவனங்களுக்கானது.

அதே போல புதிய நிறுவனங்களுக்கு ஏற்கெனவே உள்ள 29.12 சதவீத வரி இனி 17.01 சதவீதமாக இருக்கும். புதிய நிறுவனங்கள் என்பது அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்டு, 2023 மார்ச் 31-ஆம் தேதிக்குள் செயல்பாட்டைத் தொடங்கும் நிறுவனங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.


பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கை: கடந்த 28 ஆண்டுகளில் பெரு நிறுவன வரி இந்த அளவுக்கு குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது. வேலையின்மை விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த பெரு நிறுவன வரிக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பான ரூ.1.45 லட்சம் கோடி, தனியார் துறை முதலீடாக மாறும் என்பதே முக்கிய எதிர்பார்ப்பாகும்.

பங்குச் சந்தைகளில் எழுச்சி: இந்த வரிக் குறைப்பு மூலம் ஆசிய கண்டத்தின் பிற முக்கிய பொருளாதார நாடுகளான சீனா, தென் கொரியா ஆகியவற்றுக்கு இணையாக இந்தியாவிலும் பெரு நிறுவன வரி கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இதனால் நிதிப் பற்றாக்குறையை குறைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கில் பிரச்னை ஏற்படும் என்று கருதப்படுகிறது.
இந்த வரிக் குறைப்பு அறிவிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் அதிகரித்தது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 569 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வெள்ளிக்கிழமை உயர்ந்தது. அதற்கு முன்பு இரு நாள்களாக ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

இதுவே முதல்முறை...: கடந்த 1991-ஆம் ஆண்டு இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு பெரு நிறுவன வரி ஒரே நாளில் இந்த அளவுக்கு குறைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 1997-ஆம் ஆண்டில் பெரு நிறுவன வரி மிக அதிகபட்சமாக 38.05 சதவீதமாக இருந்தது.

பிற நாடுகளின் வரி விகிதம்: ஆசியக் கண்டத்தில் சீனா, தென் கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் பெரு நிறுவன வரி 25 சதவீதமாகவும், மலேசியாவில் 24 சதவீதமாகவும் உள்ளது. ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக ஜப்பான் மட்டுமே இப்போது இந்தியாவைவிட அதிகமாக, அதாவது 30.6 சதவீத நிறுவன வரி விதித்து வருகிறது. 
ஹாங்காங்கில் மிகக்குறைவாக 16.5 சதவீதமாக பெரு நிறுவன வரி உள்ளது. சிங்கப்பூரில் 17 சதவீதமாகவும், தாய்லாந்து, வியத்நாமில் 20 சதவீதமாகவும் வரி உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்கது
பெரு நிறுவன வரிக் குறைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு இதன் மூலம் மிகப்பெரிய ஊக்கம் கிடைக்கும். சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்களுக்கு பெரிய அளவில் முதலீடு கிடைக்கும். நமது தனியார் நிறுவனங்களின் போட்டித் திறன் மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இதன் பயன்கள் நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் கிடைக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி

துணிச்சலான முடிவு
இந்த வரி குறைப்பு நடவடிக்கை துணிச்சலான, வரவேற்கத்தக்க நடவடிக்கை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உகந்த நடவடிக்கை. நமது நாட்டில் பெரு நிறுவன வரி அதிகமாக இருந்தது இதுவரை சிறிய குறைபாடாக இருந்தது. இப்போது அது சரி செய்யப்பட்டுவிட்டது. 
- சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ஆளுநர்

அவசியமான நடவடிக்கை
நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக மிகமுக்கியமான மற்றும் அவசியமான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. நமது பொருளாதாரம் எத்தகைய உயர்வை எட்ட வேண்டுமென்று நாம் விரும்புகிறோமோ, அது சாத்தியமாகும்.
- பியூஷ் கோயல், வர்த்தகம், தொழில் துறை அமைச்சர்

வரவேற்கத்தக்கது
பெரு நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முடிவுதான். பட்ஜெட் தாக்கல் செய்து சில மாதங்கள்தான் ஆகியுள்ளது. அடுத்த பட்ஜெட்டுக்கும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழ்நிலையில் இப்படி ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது, மத்திய அரசு பொருளாதார நிலை குறித்த பீதியில் உள்ளதை உணர்த்துகிறது.
- ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் மூத்த தலைவர்

இடதுசாரிகள் எதிர்ப்பு
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரசியல்ரீதியான பிரச்னைகளில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டை மூழ்கடித்து வருகின்றன. மக்களின் சேமிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
- டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com