நக்ஸல் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள்: 3 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலி

கடந்த 3 ஆண்டுகளில் பல  மாநிலங்களில் நக்ஸல்கள் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும், 179-க்கும்


கடந்த 3 ஆண்டுகளில் பல  மாநிலங்களில் நக்ஸல்கள் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானதாகவும், 179-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பாக பாதுகாப்புப் படை தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நக்ஸல்கள் நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதல் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். 170-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 
பொதுமக்களைப் பொருத்த வரை, 2017-இல் 6 பேரும், கடந்த ஆண்டில் 8 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 3 பேரும் நக்ஸல்களின் கண்ணிவெடித் தாக்குதல்களுக்கு பலியாகியுள்ளனர். 
நக்ஸல் வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தான், குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோர், காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  நக்ஸல்கள் குண்டுவெடிப்பு நிகழ்த்திய சம்பவங்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டில் 43-ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 79-ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் 51-க்கும் அதிகமான குண்டுவெடிப்பு சம்பவங்களை நக்ஸல்கள் நிகழ்த்தியுள்ளனர். 
இந்த 3 ஆண்டுகளில், நக்ஸல்கள் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைத்த 1,500-க்கும் அதிகமான கண்ணிவெடிகளை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து செயலிழக்க வைத்துள்ளனர். இதில் 2017-இல் 830 குண்டுகளும், கடந்த ஆண்டில் 425 குண்டுகளும், நடப்பாண்டில் இதுவரை 240-க்கும் அதிகமான குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
கண்ணிவெடிகளை அகற்ற நடவடிக்கை: இந்நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) டிஐஜி மோசஸ் தினகரன் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 
இடதுசாரித் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நக்ஸல்கள் பதுக்கி வைக்கும் கண்ணிவெடிகளை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்யும் மிகப்பெரிய நடவடிக்கையை சிஆர்பிஎஃப், மத்திய ஆயுதக் காவல் படையினர் மேற்கொண்டுள்ளனர். 
பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் நக்ஸல்களின் எண்ணிக்கையும், அவர்களது ஆயுத பலமும் குறைந்துவிட்டது. எனவே, பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் நேரடியாக மோதுவதில்லை. மாறாக, கண்ணிவெடித் தாக்குதல்களை நிகழ்த்தவே நக்ஸல்கள் அதிகம் திட்டமிடுகின்றனர். 
அவர்கள் பதுக்கி வைக்கும் கண்ணிவெடிகள் அனைத்தையும் கண்டறிந்துவிடும் கருவிகள் நம்மிடம் இல்லை. எனவே வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றில் தீவிரமாக சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று டிஐஜி மோசஸ் தினகரன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com