தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்முறையாக தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
பெங்களூரில் வியாழக்கிழமை தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணிக்கத் தயாராகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பெங்களூரில் வியாழக்கிழமை தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணிக்கத் தயாராகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.


பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்முறையாக தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பயணித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ), இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம் (எச்ஏஎல்), வானூர்தி மேம்பாட்டு முகமை (ஏடிஏ)ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் தேஜஸ் இலகுரக போர் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு எச்ஏஎல் விமான நிலையத்தில் வியாழக்கிழமை தேஜஸ் இலகுரக போர் விமானத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணித்தார். அதிவேகமாகவும்,  திடீரென மேலும் கீழுமாகச் சுழன்று பறக்கும் தன்மையும் கொண்ட ஆயுதம் தாங்கிய போர் விமானத்தில் பயணித்த முதல் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையுடன் புதிய வரலாறு படைத்துள்ளார் ராஜ்நாத் சிங். 

இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் 30 நிமிடங்கள் அவர் பயணித்தார். விமானத்தை விமானப் படை துணை மார்ஷெல் நர்ம்தேஷ்வர் திவாரி இயக்கினார். வெற்றிகரமாக விமானத்தில் பறந்து தரையிறங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம்(எச்ஏஎல்), வானூர்தி மேம்பாட்டு முகமை(ஏடிஏ)ஆகியவற்றின் உயரதிகாரிகள்,  ஊழியர்கள் கைதட்டி பாராட்டினர்.

போர் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், தேஜஸ் இலகுரக போர் விமானத்தில் பறந்தது சிறப்பு வாய்ந்தது, உற்சாகமளிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நிகழ்வு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாகும். தேஜஸ் விமானத்தை வாங்க உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன.  இதுபோன்ற போர் விமானத்தை தயாரிக்கும் அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது பெருமை அளிக்கிறது. தேஜஸ் இலகுரக போர் விமானம், ஆயுதங்கள், படைத் தளவாடங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றார்.

விமானப் படை துணை மார்ஷெல் நர்ம்தேஷ்வர் திவாரி கூறுகையில், விமானத்தில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எடுத்துக் கூறினோம். விமானத்தின் தன்மை மற்றும் தரத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார் என்றார்.

முன்னதாக, தேஜஸ் விமானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விமானப் படை உயரதிகாரிகள் விளக்கினர். அப்போது, மத்திய ராணுவத் துறை செயலாளரும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவருமான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி, எச்ஏஎல் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ஆர்.மாதவன், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம் (எச்ஏஎல்), வானூர்தி மேம்பாட்டு முகமை (ஏடிஏ) உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com