விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு: நினைத்ததை விடவும் மிகப் பயங்கரமாகும் விஷயம்

இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் திருடுபோன விஷயம்
விக்ராந்திலிருந்து மின்னணு பொருட்கள் திருட்டு: நினைத்ததை விடவும் மிகப் பயங்கரமாகும் விஷயம்


கொச்சி: இந்தியாவில் உருவாக்கப்பட்டுவரும் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்-இல் இருந்து முக்கியமான கணினி பாகங்கள் திருடுபோன விஷயம், நினைத்துப் பார்த்ததையும் விட மிகப் பயங்கர பின்விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டப்பட்டு வரும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலைப் பற்றிய மிக முக்கிய விஷயங்கள் அனைத்தும் அந்த கருவிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், பயங்கரவாத சதித்திட்டம் ஏதேனும் இதில் இருக்குமோ என்ற அடிப்படையிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட செயல் திட்டத்தை சோதித்துப் பார்த்த போது அது இயங்காததால், கப்பலில் சோதனை செய்த போதுதான், கணினிகள் திருடுப் போன விஷயமே அதிகாரிகளுக்குத் தெரிய வந்துள்ளது.

ஒரு முக்கியமான கம்ப்யூட்டர், 10 ஹார்ட் டிஸ்குகள், 3 சிபியு ஆகியவை விக்ராந்த் கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதிக்குள் மாயமாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த திருட்டு குறித்து கண்டுபிடிக்கப்படாமல் இருந்துள்ளது. அதாவது, திருடிய பொருட்களை, எங்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அதற்கு கொள்ளையர்களுக்கு போதிய அவகாசமும் கிடைத்திருக்கிறது.

இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை, கடற்படை தரப்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இது தொடர்பாக கேரள காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவும்  விசாரித்து வருகிறது. 

கட்டுமானம் செய்யப்பட்டுவரும் போர்க் கப்பலில் இருந்து, கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளது, மிகப்பெரிய பாதுகாப்புக் குறைபாடாக பார்க்கப்படுகிறது. 

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த கணினிகளிலிருந்து 10 ஹார்டு டிஸ்க்குகள், 3 சிபியுக்கள் ஆகிய வன்பொருள்கள் திருடப்பட்டுள்ளன. அவற்றில் கப்பல் குறித்த முக்கியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

இதுதொடர்பாக உயரதிகாரிகள் கூறுகையில், கப்பலில் இருந்து ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ஆம் தேதிக்குள் தான் அந்தப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன. திருட்டு நடைபெற்று சுமார் 2 வாரங்களுக்கு அதுகுறித்த தகவல் தெரியவில்லை. இதற்குள்ளாக திருடப்பட்ட பொருள் அது கடத்தப்பட வேண்டிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அவற்றின் மதிப்பு ரூ.2.10 லட்சமாகும் என்கிறார்கள். 

இதுதொடர்பாக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருவதாக கேரள காவல்துறை இயக்குநர் லோகேநாத் பெஹரா கூறியுள்ளார். 

மேலும், கடற்படையும், மத்திய புலனாய்வு அமைப்பும் தனியே சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருட்டு சம்பவம் உளவு வேலையாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.  ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பாதுகாக்கும் பொறுப்பு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) வசம் உள்ளது. கடற்பகுதி வழியாக கப்பலுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் அதனை எதிர்கொள்ளவே சிஐஎஸ்எஃப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

எனினும், விக்ராந்த் கப்பலின் உள்பகுதியில் தனியார் பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கணினி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் கப்பலில் பாதுகாப்புப் பணிக்கு 82 பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் விசாரணை பார்வை விழுந்துள்ளது. 

கப்பலுக்குள் யார் வந்தாலும் அவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். கப்பல் கட்டும் நிறுவனத்தின் ஊழியர்களும், மற்றவர்களும் பாதுகாவலர்களின் கண்காணிப்பில்தான் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் தீவிர விசாரணையை விட, விரைவான விசாரணை என்பதுதான் மிகவும் முக்கியம். காணாமல் போன பொருட்கள் பயங்கரவாதிகளின் கையில் சிக்கினால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்பதே அந்த அவசரத்துக்கக் காரணமாக அமைகிறது.

கடந்த இரண்டு மாத காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்தை சுற்றிப் பார்த்துச் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் தீவிரமாக சோதித்த பிறகே அனுமதிப்பது வழக்கம். அந்த ஆவணங்களின் நகல்கள் பாதுகாக்கப்படுவதும் வழக்கம். இந்த ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பல் கட்டுமானப் பணியில் தொடர்புடைய நபர்கள் எவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

கப்பலின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்புக் கேமராவும், கண்காணிப்பு உணர் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com