விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை

கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் உள்ள நவீன கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய
விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை


கொச்ச்சி : கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் உள்ள நவீன கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுவரும் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலின் முக்கிய தகவல்கள் அடங்கிய கணினிகள் மாயமாகியிருப்பது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல், கட்டப்படும் தளத்துக்கு யாரும் எளிதில் சென்று விட முடியாது. தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் விக்ராந்த் கோர்க் கப்பலில் இருந்த 4 கணினிகள் மாயமாகியிருப்பதும், சில கணினிகளில் இருந்த ஹார்ட்டிஸ்க் போன்றவை காணாமல் போயிருப்பதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த கணினிகளில்தான் விக்ராந்த் கப்பலின் முழு தகவல்களும் அதாவது எரிபொருள் நிரப்ப வேண்டிய பகுதி, ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என அனைத்து விவரங்களும் முழுமையாக இருக்கும் என்பதால், கணினிகள் மாயமானது குறித்து தீவிர விசாரணைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த்..
இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் முதல் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்தில் சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் கட்டுமானப் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வந்தன. நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில், ஐஎன்எஸ் விக்ராந்தில் எரிவாயு மூலம் இயங்கும் டர்பைன்கள் செயல்படத் தொடங்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஐஎன்எஸ் விக்ராந்த் முழுமையான முதல்கட்ட சோதனைக்கு உள்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சோதனையின் போது மிதக்கும் நிலையில் கப்பலின் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்திறன் சோதிக்கப்படும். அதைத் தொடர்ந்து கப்பலை கடலில் இறக்கிச் சோதனை செய்யப்படும். இறுதியாக அந்தக் கப்பல் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 

ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே அதில் விமானங்களை இயக்கும் சோதனை நடத்தப்படும். 

சீனா உள்ளிட்ட நமது அண்டை நாடுகளின் பலத்தைப் பொருத்தே நாம் விமானம் தாங்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கான தேவையும் இருக்கும். கடல்சார்ந்த பகுதிகளில் நமது விமானப் படையின் செயல்பாடுகளுக்கு இத்தகைய விமானம் தாங்கிக் கப்பல்கள் அவசியமாகும்.

உலகத் தரத்திலான போர்க் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் கட்டுமானம் செய்யும் வகையில் இந்தியாவின் திறன் மேம்பட்டுள்ளது. 

வர்த்தக ரீதியாகவும் கப்பல்களை கட்டுமானம் செய்யக் கூடிய வகையில் நமது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடற்படை துணைத் தளபதி ஏ.கே. சக்ஸேனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com