பிரதமர் மோடியின் பரிசுப் பொருட்கள் ஏலம்: வெள்ளிக்கலசம் மற்றும் மோடியின் புகைப்படம் தலா ரூ.1 கோடிக்கு ஏலம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் அவரது இரண்டு நினைவுப் பரிசுகள் தலா ரூ.1 கோடிக்கு இன்று ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
ராஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் அவரது இரண்டு நினைவுப் பரிசுகளான வெள்ளிக்கலசம் மற்றும் மோடியின் புகைப்படம் தலா ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 

நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக நாட்டின் பிரதமராக கடந்த மே  மாதம் பதவியேற்றார். அவர் கடந்த முறை ஆட்சியின் போதே பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெளிநாடுகள் மற்றும் நமது நாட்டில் பல்வேறு கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவருக்கு பல நினைவுபரிசுகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறை மோடியின் நினைவுப் பரிசுகளுக்கான ஏலம் நடைபெறும். அந்த வகையில் கடந்த 6 மாதங்களாக அவருக்கு கிடைத்த பரிசுகள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஏலத்திற்காக வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக  சால்வைகள், ஜாக்கெட்டுகள், உருவப்படங்கள், வாள் மற்றும் தலைக்கவசங்கள் உள்ளிட்ட 2,772 பொருட்களின் அடிப்படை விலை ரூ.200 முதல் ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பிரதமர் மோடிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட தேங்காயுடன் கூடிய கலசம் ஒன்றை பரிசளித்திருந்தார். இந்த வெள்ளிக் கலசம் ஏலத்தில் விடுவதற்கான அடிப்படை விலை ரூ.18,000 என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இறுதியில் இந்தக் கலசம் இன்று ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்றும் ரூ.1 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.500 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தின் மூலமாக கிடைத்த தொகை நமாமி கங்கை தூய்மைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் www.pmmementos.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக இந்த ஏலத்தில் பங்கெடுக்கலாம் என்றும் வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஜனவரி மாதத்தில் மோடிக்கு பரிசாகக் கிடைத்த சுமார் 1,800க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்திற்கு வந்தன. 

மேலும், இன்று பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் பலரும் இன்று தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com