இந்தியா

பணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் 

17th Sep 2019 07:54 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பண மோசடி வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறையினர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர் இப்போது கர்நாடகத்தின் கனகபுரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், அவரிடம் 3 முறை விசாரணை நடத்தினர். 

ADVERTISEMENT

இதே குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள கர்நாடக பவன் ஊழியர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நான்காவது முறையாக தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிவகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜரானார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டி இருப்பதால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர்.

இந்த நிலையில் சிவகுமார் தில்லி நீதிமன்றத்தில் செவ்வாயன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து டி.கே.சிவகுமார் திகார் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT