மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை (செப். 18) சந்தித்துப் பேச இருக்கிறார். இதனை மேற்கு வங்க தலைமைச் செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேற்கு வங்கத்தில் அரசியல்ரீதியாக பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் ஒருவர் மீது மற்றொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை, மம்தா சந்திப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேங்கு வங்க மாநில அரசின் நிர்வாக விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
இந்த சந்திப்புக்காக மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இருந்து செவ்வாய்க்கிழமை தில்லி செல்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென்று கடந்த வாரம், மேற்கு வங்க முதல்வர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி தில்லியில் புதன்கிழமை பிரதமர் மோடியைச் சந்திக்க மம்தா பானர்ஜிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு இரு தலைவர்களும் கடந்த 2018 மே 25-ஆம் தேதி சாந்திநிகேதன் விஸ்வ பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சந்தித்தனர்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸூக்கும் இடையே அரசியல்ரீதியாக கடும் போட்டி ஏற்பட்டது. மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக குறிப்பிடத்தக்க அளவிலான தொகுதிகளில் வென்றது, திரிணமூல் காங்கிரஸூக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸூக்கு போட்டியாக பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.
இது தவிர, சாரதா நிதி நிறுவன மோசடியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும், கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையரும் சிபிஐ விசாரணையில் சிக்கியுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பாஜக விமர்சனம்: இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக தேசியச் செயலர் ராகுல் சின்ஹா, "மக்களவைத் தேர்தல் தொடங்கி இப்போது வரை பிரதமரை எந்த அளவுக்கு மோசமாக மம்தா விமர்சித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது, அவர் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். தனக்கு வேலை நடக்க வேண்டுமென்றால் எந்த நிலைக்கு வேண்டுமானாலும் மம்தா செல்வார். பின்னர் உதவியவர்களை மறந்துவிட்டு அவதூறு பரப்புவார்' என்றார்.
"சாரதா நிதி மோசடி வழக்கில் இருந்து தன்னையும், தனது கட்சித் தலைவர்களையும் காத்துக்கொள்வதற்காகவே பிரதமர் மோடியை சந்திக்க மம்தா முடிவு செய்தார்' என்று பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.