தனியார் துறை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சட்டமியற்ற ராஜஸ்தான் மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு இருப்பதுபோல தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை உள்ள நிலையில், தனியார் துறை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, ஆந்திரத்தில் தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டுமென்று அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அண்மையில் சட்டம் இயற்றியது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் தொழில்துறை வேலைவாய்ப்பில் 70 சதவீதத்தை உள்ளூர் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று அந்த மாநில முதல்வர் கமல்நாத் தனது சுதந்திர தின உரையில் கூறினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில திறன் மேம்பாடுத் துறை செயலர் சமித் சர்மா கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் துறை பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை மற்றும் இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை கொண்டுவர மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக துறைரீதியாக அதிகாரிகள் கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார்.