குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடுவை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திங்கள்கிழமை தில்லியில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அண்மையில் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக தில்லிக்கு திங்கள்கிழமை வந்த அவர், குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவை சந்தித்தார்.
பின்னர் தெலங்கானா இல்லத்தில் அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆளுநராகப் பதவி ஏற்ற நிலையில், குடியரசுத் துணைத் தலைவரிடம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக தில்லி வந்தேன். அவர் 20-ஆம் தேதி தெலங்கானாவுக்கு வரும் திட்டம் உள்ளது. அதற்கு முன்பாக அவரை நேரில் சந்தித்து ஆசி பெற வந்தேன்.
நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் காகிதப் பைகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஊடகத்தினரும் நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பதுடன் அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.