பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாத நடவடிக்கைகளாலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போர் குறித்துப் பேசுவதாலும் அந்நாடு உடைந்து சிதறும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உடைந்து சிதறும்: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புது தில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளாலும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போர் குறித்துப் பேசுவதாலும் அந்நாடு உடைந்து சிதறும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை பாகிஸ்தான் கூறுவது பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவுடன் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக இம்ரான் கான் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அதனை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அங்கு இந்தியா மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. ஆனால், இந்தப் பிரச்னையில் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சர்வதேச ஆதரவு கிடைக்கவில்லை. மேலும், காஷ்மீரில் பயங்கரவாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானின் முயற்சிகளையும் இந்தியத் தரப்பு முறியடித்து வருகிறது. 

இந்நிலையில், தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் இருப்பதாகவும், இது அணு ஆயுதப் போராக மாற வாய்ப்பு இருப்பதாகவும் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுட்டுரையில் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில், சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து வருகின்றன. தேசப்பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானுக்குச் சென்றவர்களை (முஸ்லிம்கள்) முஹஜீர்கள் என்று அழைத்து இப்போதுவரை அவமானப்படுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர்களும் மரியாதையாக நடத்தப்படுகின்றனர்.

பாகிஸ்தானில் அண்மையில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு என்ன கொடுமை நிகழ்ந்தது என்பதை உலகின் பார்வையில் இருந்து மறைக்க முடியவில்லை. அப்பெண்ணை கட்டாயப்படுத்தி மதமாற்றி, திருமணம் செய்து வைத்துள்ளனர். சீக்கியர்கள் மட்டுமல்ல பலூச் உள்ளிட்ட பல சிறுபான்மையின மக்கள் பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்படுகின்றனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பிற நாடுகள் மீது மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டை கூறுவதற்கு முன்பு, தங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை பாகிஸ்தானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. காஷ்மீரில் அமைதி நிலவுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான நாடு என்ற இந்தியாவின் பெருமை சர்வதேச அளவில் அதிகரிப்பதை சிதைக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது.

போர் குறித்துப் பேசுவதை இம்ரான் கான் நிறுத்த வேண்டும்; பயங்கரவாத செயல்களைத் தூண்டி விடுவதை பாகிஸ்தான் உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் அந்த நாடு உடைந்து பல துண்டுகளாக சிதறுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

மத அரசியல் நடத்தப்பட்ட காரணத்தால் இந்தியாவை பிரிட்டிஷ் அரசு இரு நாடுகளாகப் பிரித்து சுதந்திரமளித்தது. மதரீதியாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தோற்றது. அதில் இருந்து வங்கதேசம் என்ற நாடு உருவானது. பாகிஸ்தான் தவறான பாதையிலேயே தொடர்ந்து பயணித்தால் மேலும், பல துண்டுகளாக அந்நாடு உடைந்து சிதறுவதை எவராலும் தடுக்க முடியாது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com