கர்நாடகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காதது ஏன்?

கர்நாடகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்காதது ஏன் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை வழங்காதது ஏன்?

கர்நாடகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி வழங்காதது ஏன் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு பொருள் சேதம் ஆகியுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக கர்நாடகத்துக்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை. இந்த அவலத்தை கேள்விக்குட்படுத்தும் துணிவு கர்நாடக அரசுக்கு இல்லை. 
கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்துவரும் பாஜக அரசு, கோழைத்தனமானதாகும்.  2009-ஆம் ஆண்டு எடியூரப்பா முதல்வராக இருந்த காலத்தில் வட கர்நாடகத்தில் அப்போதும் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான பொருள் சேதம் ஏற்பட்டிருந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வெள்ளப் பாதிப்புப் பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்து, உடனடியாக ரூ.1,500 கோடியை வெள்ள நிவாரண நிதியாக விடுவித்திருந்தார். கர்நாடகத்தில் மிகவும் மோசமாக வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். அந்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற பிரதமர் நரேந்திர மோடி வராதது ஏன்? 
வெள்ளத்தில் சிக்கிய லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து வீதிக்கு வந்துள்ளனர். இயலாமைக்குத் தள்ளப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் செய்வது அறியாது திகைத்துள்ளனர். 
கதக், ஹாவேரி, சிக்கமகளூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் மெளனம் சாதித்து வருகின்றன. வெள்ள நிவாரண நிதி கேட்டு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கர்நாடக  அரசுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 
மத்திய அரசு பொருளாதார கையிருப்பு இல்லாமல் நொடிந்து போயிருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது உண்மையில்லை என்றால், நாட்டின் பொருளாதார நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். 
நாளொன்றுக்கு புதியதொரு நாட்டுக்குச் சென்று வரும் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற மனிதநேயம் இல்லாதவராகிவிட்டார். 
இரவு பகலாக கடுமையாக உழைத்து விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் தோல்வி அடைந்துவிட்டது. சந்திரயான்-2 விண்கலம் நிலவில் கால்பதிப்பதை காண செலவிட்ட சிலமணி நேரத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு, நிவாரண உதவிகளை அறிவித்திருந்தால் மக்கள் பாராட்டியிருப்பார்கள். 
அற்பத்தனமான மூடநம்பிக்கைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும், 2009-இல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோதும் வட கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போதும் எடியூரப்பா முதல்வராக இருக்கும்போது வட கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com