ஃபரூக் அப்துல்லா எங்கே? வரும் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஃபரூக் அப்துல்லா எங்கே? வரும் 30ம் தேதிக்குள் மத்திய அரசு பதில் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்பது குறித்து வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட  ஆள்கொணர்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. மனுதாரர் (வைகோ) பல ஆண்டுகளாக சென்னையில் இந்த மாநாட்டை நடத்தி வருகிறார். தற்போது நடைபெற உள்ள மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஃபரூக் அப்துல்லா அழைக்கப்பட்டிருந்தார். அவரும் பங்கேற்பதாக சம்மதித்திருந்தார். இதற்கு முன்னர் நடைபெற்ற மாநாட்டிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

ஆனால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவரை தொடர்பு கொள்ள மனுதாரர் முயற்சி செய்தார். எனினும், அது முடியவில்லை. இதையடுத்து, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஃபரூக் அப்துல்லாவை சென்னை வர அனுமதிக்குமாறு ஆகஸ்ட் 29-ஆம் தேதி உரிய துறையின் அதிகாரிகளுக்கு மனுதாரர் கடிதம் எழுதினார். எனினும், அவர் எழுதிய கடிதத்துக்கு உரிய பதிலை அளிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். இது சட்டவிரோதமாகும்.

இதையடுத்து, அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். அதன்படி,  ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை  இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com