370-ஆவது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது
370-ஆவது பிரிவு ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது, அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை நடத்துகிறது. 
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு, காஷ்மீர் தொடர்புடைய மேலும் சில மனுக்களையும் திங்கள்கிழமை விசாரிக்
கிறது. 
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆஸாத் அந்த மாநிலத்தில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை சந்திக்க காஷ்மீர் செல்வதற்கு அனுமதி கோரியுள்ள மனுவும் இதில் அடங்கும். 
அதேபோல், 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கும், ஜம்மு-காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவும் திங்கள்கிழமை விசாரிக்கப்படுகிறது. 
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த மாநிலத்தில் குழந்தைகள் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர் எனாக்ஷி கங்குலி, விரிவுரையாளர் சாந்தா சின்ஹா ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது. 
தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை அனுமதிக்கக் கோரி மதிமுக பொதுச் செயலரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ தாக்கல் செய்த மனுவும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. 
அதேபோல், காஷ்மீரில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ யூசுஃப் தாரிகாமியை சந்திக்க அந்த மாநிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தாக்கல் செய்த மனுவையும் நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. இந்த மனு முன்னரே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தாரிகாமி தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 
ஜம்மு-காஷ்மீரில் ஊடகங்கள் மீதான தடையை விலக்கக் கோரி காஷ்மீர் டைம்ஸ் ஆசிரியர் அனுராதா பாசின் தாக்கல் செய்த மனுவும் திங்கள்கிழமை விசாரிக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com