இந்தியா

அம்மாடியோவ்! இப்படி ஒரு அலுவலகமா? வாயைப் பிளக்க வைக்கும் அமேஸான்! 

13th Sep 2019 02:21 PM

ADVERTISEMENT

சர்வதேச அளவில் இயங்கும் அமேஸான் நிறுவனங்களுக்கு மிக முக்கிய மனித வளத்தை அந்நிறுவனம் இந்தியாவில் இருந்து தான் பெறுகிறது.

அதே சமயம், இந்தியாவில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு அமேஸான் முதலீடும் செய்துள்ளது.

இதையெல்லாம் விட தற்போது செய்திருக்கும் மிக முக்கிய அதிசயம் என்ன தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் விற்பனை சந்தையான அமேஸான் இந்தியாவில் தலைமை அலுவலகத்தை கட்டியிருப்பதுதான்.

அமெரிக்காவைச் சேர்ந்த வலைதள வர்த்தக நிறுவனமான அமேஸானுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய புதிய வளாகம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து அமோஸான் நிறுவனத்தின் துணைத் தலைவர் (சர்வதேச கட்டுமானம்) ஜான் ஷோட்லர் கூறியதாவது:

சுமார் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 40 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் கட்டப்பட்டுள்ளன.

இதில், 18 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் மூலமாக இந்தியாவில் 15,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும்,  பிற பகுதிகளில் உள்ள நிறுவனத்தின் பணியாளர்களும் இப்புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதுவரை, 4,500 பேர் ஏற்கெனவே புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி இந்த வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 2,000 பணியாளர்களின் உழைப்பில் 39 மாதங்களில் இப்புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாக உருக்கு பயன்படுத்தப்பட்டு இந்த வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

மிகப்பெரிய கட்டடம் என்ற பெருமையோடு இது ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. சுமார் 282 அடி உயரத்தில் இந்த கட்டடம் நிமிர்ந்து நிற்கிறது.

65 கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவில் இந்த கட்டடம் அமைந்துள்ளது. ஹெலிபேட் வசதி உள்ளிட்டவை கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த கட்டடத்தில் 49 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 972 பேர் மின் தூக்கி எனப்படும் லிஃப்ட்டுகளை பயன்படுத்தலாம். இஃபிள் டவரை விட 2.5 மடங்கு இரும்பு கூடுதலாக இந்த கட்டடத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

15,000 ஊழியர்கள் பணியாற்றும் வகையில் அலுவலகத்தில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதான் உலகிலேயே அமேஸானின் ஒரே மிகப்பெரிய அலுவலகக் கட்டடமாகும்.

இந்த கட்டடத்தில் பிரார்த்தனைக் கூடங்கள், தாய்மார்களுக்கான தனி அறைகள், ஓய்வறைகள், எப்போதும் திறந்திருக்கும் உணவகங்கள், ஹெலிபேட் என பல தரப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும்.

ஹைதராபாத் ஏற்கனவே மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள், ஃபேஸ்புக், அசெஞ்சர், டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்களின் தாய் வீடாக மாறிப் போன நிலையில், தற்போது அதற்கெல்லாம் மணிமகுடமாக அமேஸானும் அங்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தை நிறுவியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT