இந்தியா

வங்கிகள் இணைப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள் சங்கம் 26-இல் வேலைநிறுத்தம்

13th Sep 2019 03:08 AM

ADVERTISEMENT


நாட்டில் உள்ள பத்து பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 26-ஆம் தேதி முதல் இரு நாள் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக வங்கி அதிகாரிகளின் நான்கு சங்கங்கள் அறிவித்துள்ளன.
பத்து பெரிய பொதுத்துறை வங்கிகளை இணைத்து நான்கு வங்கிகளாக மாற்றவிருப்பதாக மத்திய அரசு கடந்த மாதம் 30-ஆம் தேதி அறிவித்தது. இந்த முடிவைக் கண்டித்து வரும் 26-ஆம் தேதி முதல் இரு நாள்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக இந்திய வங்கிகள் சங்கத்துக்கு வங்கி அதிகாரிகளின் நான்கு சங்கங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. ஏஐபிஓசி, ஐஐபிஓஏ, ஐஎன்பிஓசி, என்ஓபிஓ ஆகியவையே அந்த நான்கு சங்கங்களாகும்.
வங்கி இணைப்பு நடவடிக்கையைக் கண்டிப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து வேலை நாள்களை நடைமுறைப்படுத்துவது, பணப் பரிவர்த்தனை நேரத்தைக் குறைப்பது, ஊழியர்களின் பணிநேரத்தை ஒழுங்குபடுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக இச்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வங்கி முறைகேடு தொடர்பான விவகாரங்களில் வெளி விசாரணை அமைப்புகள் தேவையின்றி தலையிடுவதை நிறுத்துவது, ஓய்வுபெற்ற பணியாளர்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது, போதுமான பணியாளர் நியமனம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, வாடிக்கையாளர்களுக்கு சேவைக் கட்டணத்தைக் குறைப்பது ஆகிய கோரிக்கைகளையும் இச்சங்கங்கள் முன்வைத்துள்ளன. 
இது குறித்து ஏஐபிஓசி சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபக் குமார் சர்மா, சண்டீகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 25-ஆம் தேதி நள்ளிரவு முதல் 27-ஆம் தேதி நள்ளிரவு வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தும் என்று தெரிவித்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT