இந்தியா

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தானுக்கு தோல்வி

13th Sep 2019 01:05 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அரசியலாக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது. 
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் எழுப்பி அதை அரசியலாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. 
ஆனால், அந்த முயற்சி நிராகரிக்கப்பட்டது. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் அதை உண்மையாக்கி விட முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும். 
பயங்கரவாதத்தை ஆதரிப்பதிலும், அதற்கு உதவி செய்வதிலும் பாகிஸ்தானின் பங்கு எத்தகையது என்பதை சர்வதேச சமூகம் நன்றாகவே அறிந்துள்ளது. பயங்கரவாத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் பாகிஸ்தான், மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் சார்பில் பேச முனைவது ஆச்சர்யமளிக்கிறது. 
இன, மத ரீதியிலான சிறுபான்மையினரை பாகிஸ்தான் எவ்வாறு துன்புறுத்துகிறது என்பதை இந்த உலகத்துக்கு நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காஷ்மீர் விவகாரத்தில் அந்த மக்களுக்கான தூதர் போல செயல்பட முற்படும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை சந்தேகத்துக்கு இடமானதாகவே உள்ளது. இதை சர்வதேச சமுதாயமும் அறிந்திருக்கிறது என்று ரவீஷ் குமார் கூறினார். 
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த இரு நாள்களுக்கு முன்பு வார்த்தைப் போர் ஏற்பட்டது. அப்போது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் இறையாண்மைக்கு உள்பட்ட முடிவு என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்தது. 
எனினும், காஷ்மீரில் உள்ள சூழல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மூலம் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது. எனினும், பாகிஸ்தானின் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT