வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

அயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: அடுத்த வாரம் விசாரணை

DIN | Published: 11th September 2019 08:47 PM


அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான பிரச்னைக்கு, சமரசம் மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் மத்தியஸ்தக் குழு ஒன்றை அமைத்தது. ஆனால், மத்தியஸ்தம் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் இதுதொடர்பாக நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி உச்சநீதிமன்றமும், இந்த வழக்கு தொடர்பாக மனுத் தாக்கல் செய்துள்ள அனைத்து தரப்பு வாதங்களையும் ஆகஸ்ட் 6 முதல் நாள்தோறும் விசாரித்து வருகிறது. 

இதனிடையே, அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணையை நேரலை செய்யுமாறு பாஜகவின் முன்னாள் தலைவரும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் உடையவருமான கே.என்.கோவிந்தசார்யா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 

அதில், "நேரலை செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யமுடியாத பட்சத்தில், வழக்கு விசாரணைகளை எழுத்துப்பூர்வ பதிவாக வெளியிட வேண்டும். அதைப் பின்னர் இணையதளத்தில் வெளியாட்டாலும் பரவாயில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டு ஒரு வருட காலமாகியும், அது இன்னும் செயல்படுத்த முடியாமலேயே உள்ளது. இது நாட்டின் மிக முக்கியமான வழக்கு. இது கடந்த 9 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் முடிவெடுக்க முடியாமல் இருப்பதற்கான தாமதத்தின் பின்னணி குறித்து அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.     

இதை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, இந்த மனு குறித்து அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்தார். 

வழக்கு விபரம்:

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. 

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தம் குழுவைக் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அமைத்தது.

அனைத்து தரப்பினருடன் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட அக்குழு, தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீதான விசாரணை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு முன் நடைபெற்றது. 

இந்த விசாரணையின் முடிவில், "நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்த அறிக்கையை நாங்கள் ஆராய்ந்தோம். அதில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையேயான மத்தியஸ்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 6-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளோம். மனு தாக்கல் செய்துள்ள அனைத்து தரப்பினரின் விவாதங்களைப் பதிவு செய்யும் வரை, நாள்தோறும் விசாரணை நடைபெறும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்த நிலையில், அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யுமாறு பாஜக முன்னாள் தலைவரும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவருமான கே.என். கோவிந்தசார்யா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். 

முன்னதாக, இந்திரா தேசிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப சில கட்டுப்பாடுகளுடன் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதாவது, அனைத்து நீதிமன்றங்களிலும், அனைத்து விசாரணைகளையும் நேரலையாக ஒளிபரப்புவது போல் அல்லாமல், மிக முக்கியமான வழக்குகளின் விசாரணைகளை மட்டும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பலாம் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் இருந்து நேரலையை தொடரலாம் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Ayodhya Case live streaming Ayodhya case Supreme Court Babri Masjid பாபர் மசூதி அயோத்தி வழக்கு நேரலை அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றம்

More from the section

மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?
நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!
ஆயுட்காலம் முடிவடைகிறது: விக்ரம் லேண்டரின் நிலை என்ன?
தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை