இந்தியா

கும்பல் தாக்குதலில் பலியானவரின் பிரேத பரிசோதனையில் நெஞ்சை பதற வைக்கும் தகவல்

10th Sep 2019 03:10 PM

ADVERTISEMENT

 

மோட்டார் சைக்கிள் திருட முயன்றதாகக் கூறி பிடிக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரியை ஜெய்ஸ்ரீராம், ஜெய் பஜ்ரங் பலி என முழக்கமிடுமாறுக் கூறி ஒரு கும்பல் அடித்தேக் கொன்றது.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரி 4 நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரஸ் அன்சாரி. இவர் கடந்த ஜூன் 18-ம் தேதி ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் போது, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார்.

ADVERTISEMENT

ஒரு கும்பல் அவரைத் தாக்கும் விடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 4 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். 

அவர் மீது நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலால்தான் 24 வயது தப்ரஸ் பலியானார். இதில் தொடர்புடைய 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தப்ரஸின் பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் கொலை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பல மணி நேரம் அடித்துத் துன்புறுத்தப்பட்ட தப்ரஸ் அன்சாரி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானார். ஆனால், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட 11 பேர் மீதான கொலை வழக்கும் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவர் மீது நடத்தப்பட்ட கும்பல் தாக்குதலை விடவும், அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இருக்கும் தகவல் வெளியான போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT