இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப்பிரியா

எனது வெற்றி இதன் தொடக்கம் தான் என்று அனுப்பிரியா துணிவுடன் தெரிவித்தார்.
இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப்பிரியா
இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி அனுப்பிரியா

ஒடிஸா மாநிலத்தின் நக்ஸலைட் தாக்குதல்கள் அதிகம் உள்ள மால்கன்கிரி கிராமத்தைச் சேர்ந்த மரினியஸ் என்ற காவல் அதிகாரியின் மகள் அனுப்பிரியா (27), சிறுவயதில் இருந்தே விமானியாக வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவர்.

அனைத்து தடைகளையும் கடந்து 21 வயதில் பொறியியல் பட்டம் முடித்தவர், அரசின் விமான பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஐந்து வருடப் பயிற்சிக்குப்பின் விமானியாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து இந்த மாத இறுதியில் தனியார் ஏர்லைன்ஸில் இணைப் பைலட்டாகப் பணியைத் தொடங்குகிறார். 

இதன்மூலம் `இந்தியாவின் பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் விமானி' என்ற பெருமையைப் பெறுகிறார்.

இதுகுறித்து அனுப்பிரியா தாயார் யாஸ்மின் லக்ரா கூறுகையில், நாங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நக்ஸலைட்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். இதனால் என் மகளால் எதுவும் சாதிக்க முடியாது என்று பலர் விமர்சனம் செய்தனர். ஆனால், என் மகள் இன்று அனைத்து விமர்சனங்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும் என்று மகிழ்ச்சி பொங்க பெருமிதம் தெரிவித்தார்.

முன்பெல்லாம் நக்ஸலைட்களின் தாக்குதல்களுக்கு அஞ்சி பலர் தங்கள் கனவைத் தொலைத்தனர். ஆனால், தற்போது பலர் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். நக்ஸலைட்களின் அச்சுறுத்தல்களுக்கு எங்களின் வாழ்வை இழக்க நாங்கள் யாரும் தயாராக இல்லை. எனவே அவர்களை துணிந்து எதிர்த்துப் போராடி வருகிறோம். எனது வெற்றி இதன் தொடக்கம் தான் என்று அனுப்பிரியா துணிவுடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com