இந்தியா

மலேரியா பாதிப்பு: 4-ஆவது இடத்தில் இந்தியா

10th Sep 2019 01:16 AM

ADVERTISEMENT


உலக அளவில் மலேரியா பாதிப்பில் இந்தியா 4-ஆவது இடத்தில் இருப்பதாக, தி லேன்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 22 கோடியாகும். இந்தியாவில் மட்டும் சுமார் 1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா பாதிப்பில் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காங்கோ ஜனநாயக குடியரசு, மொசாம்பிக் ஆகிய நாடுகள், முதல் 3 இடங்களில் உள்ளன. 4-ஆவது இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியா ஆய்வாளர்கள், உயிரி-மருத்துவ ஆய்வாளர்கள், பொருளாதார நிபுணர்கள், சுகாதார கொள்கை நிபுணர்கள் என சுமார் 40 வல்லுநர்கள் அடங்கிய குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், 2030-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை ஒழிப்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சவாலானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மலேரியாவை ஒழிக்க தொழில்நுட்ப ரீதியிலான வழிமுறைகளில் இந்த நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை, நகர்ப்புறங்களில்தான் மலேரியாவின் தாக்கம் அதிகமுள்ளது. மலேரியாவைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்துக்கான வாய்ப்புகள் நகர்ப்புறங்களில் அதிகமுள்ளதே இதற்கு காரணம். நகர்ப்புறங்களில் மலேரியாவை ஒழிக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் சிறப்பு கவனமும் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT