வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சவால்களை எதிர்கொள்வதற்கு சிங்கப்பூரின் ஆதரவு தேவை: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

DIN | Published: 10th September 2019 01:25 AM


உலக மாற்றத்தினால் உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு சிங்கப்பூரின் ஆதரவு தேவை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நட்புறவின் அடுத்தக்கட்டம் என்ற தலைப்பிலான மாநாடு, திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்கவிழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

சர்வதேச அளவிலான விதிகளை எழுதுவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒப்பந்த விதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சூழல் தற்போது நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. சீனாவின் எழுச்சி, சீனா-அமெரிக்கா இடையேயான போட்டி ஆகியவை மட்டுமன்றி, பிற நாடுகளின் எழுச்சியும் புதிய சவால்களை உருவாக்கியுள்ளன.
கடற்பரப்பை பாதுகாப்பானதாக மாற்றுவதன் மூலம் பிற நாடுகளுடன் ஏற்படும் தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு காரணமாக ஏற்பட்ட ஒருங்கிணைப்பு, சட்டத்தின் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்ட அடித்தளம், ஆசியான் நாடுகளுக்கு இடையேயான ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் இந்திய-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமான வெளியாக இந்தியா பார்க்கிறது.
உலக நாடுகள் மாறிக் கொண்டிருந்தபோது, அதற்கேற்ப இந்தியாவும் மாறியது. அந்த சமயத்தில், சிங்கப்பூரின் ஆதவை இந்தியா நாடியது. சிங்கப்பூரும் இந்தியாவுக்கு உதவி செய்தது. அதன்படி, கிழக்கு நோக்கிய கொள்கையை இந்தியா உருவாக்கியது. அதன் பின்னர், இந்தியாவின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் சிங்கப்பூர் முக்கிய பங்குதாரராக மாறியது. இது, இந்தப் பிராந்தியத்தில் ஒரு பாலமானது.
2005-இல் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பில் இந்தியாவும், சிங்கப்பூரும் உறுப்பினர்களாக இணைந்தன. அந்த காலகட்டத்தில், இந்தியாவில் முதலீடு செய்யும் நேரடி ஆதாரமாக சிங்கப்பூர் விளங்கியது. இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு சிங்கப்பூர்தான்.
பாதுகாப்புத் துறையில் இந்தியா, சிங்கப்பூர் இடையேயான உறவு வலிமை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையே கடந்த 25 ஆண்டுகளாக தொய்வின்றி கடற்படைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்று வேறு எந்த நாட்டுடனும் இந்தியா நட்புறவு கொண்டிருக்கவில்லை. தற்போது, அந்தக் கடற்படை பயிற்சியில் தாய்லாந்துடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவும், சிங்கப்பூரும் மேலும் பல துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியுள்ளது என்றார் எஸ்.ஜெய்சங்கர்.

தலைவர்களுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமர் லீ ஹெசின் லூங், வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் சுன்சுன் சிங் ஆகியோரை ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 
அவர்களுடன் இந்தியா-சிங்கப்பூர் இடையே பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கர் ஆலோசித்தார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்?  இஸ்ரோ ஆய்வு 
திஹார் சிறை எண்.7ல் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!
விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை
விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு 
ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தை அக். 3 வரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு