இந்தியா

காஷ்மீர்: பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்வு

10th Sep 2019 01:20 AM

ADVERTISEMENT


காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஸ்ரீநகரின் சில இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து மற்றும் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் முடிவுகளை மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி அறிவித்தது. இதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 
நிலைமை மேம்படுவதைப் பொருத்து, கட்டுப்பாடுகள் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில், ஸ்ரீநகரின் உள்பகுதிகளில், குறிப்பாக மைசுமா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அதேசமயம், முக்கிய வர்த்தகப் பகுதியான லால் சௌக் மற்றும் அதனைச் சுற்றிய இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
 சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
முன்னதாக, மொஹரம் மாதத்தின் 8-ஆவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊர்வலங்கள் நடைபெறுவதை தடுக்க ஸ்ரீநகர் முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிப்பு: காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதாலும், பொதுப் போக்குவரத்து இயங்காததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை 36-ஆவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பதற்றமான பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. முக்கிய மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. 
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அச்சம் காரணமாக, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காத நிலை உள்ளது. 
பொதுப் போக்குவரத்து இயங்காததால், அரசு அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி மற்றும் முக்கியத் தலைவர்களின் வீட்டுக் காவலும் நீடித்து வருகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT