இந்தியா

காரில் வேகமாகச் சென்றதற்காக அபராதம் செலுத்தியுள்ளேன்: நிதின் கட்கரி

10th Sep 2019 01:29 AM

ADVERTISEMENT


மும்பையில் பாந்த்ரா-வோர்லி கடல்வழி பாலத்தில் காரில் வேகமாக சென்றதற்காக நான் கூட அபராதம் செலுத்தியுள்ளேன் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், கடந்த 1-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விளக்கமளிக்கும்போது, தானும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக காரில் சென்றதற்காக அபராதம் செலுத்தியதாக அமைச்சர் கட்கரி கூறியுள்ளார்.
மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாஜக தலைமையிலான மத்திய அரசு 100 நாள்களைக் கடந்துள்ளது. இதில் செய்யப்பட்ட சாதனைகள் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கட்கரி கூறியதாவது:
பல வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய முடிவுகளை எடுத்ததுடன், மக்கள் நலன் சார்ந்த பல மசோதாக்களையும் கடந்த 100 நாள்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது தவிர முத்தலாக் தடைச் சட்டம், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் ஆகியவையும் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
மும்பையில் பாந்த்ரா-வோர்லி கடல்வழி பாலத்தில் காரில் வேகமாக சென்றதற்காக நான் கூட அபராதம் செலுத்தியுள்ளேன். அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. இதனால், லஞ்சம் அதிகரிக்காது.
ஜம்மு-காஷ்மீரில் வறுமை தொடர்ந்து அதிகரித்து வந்ததற்கு சிறப்பு அந்தஸ்துதான் காரணமாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரை பாகிஸ்தான் நடத்தி வந்தது. 
அந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் பாகிஸ்தான் தூண்டிவிட்டது. படித்து வேலைக்குச் செல்ல வேண்டிய இளைஞர்களை தவறாக வழி நடத்தி, கூலிக்காக கல்வீச்சில் ஈடுபடும் வன்முறையாளர்களாக மாற்றி வைத்திருந்தனர். இப்போது அவை அனைத்துக்கும் முடிவு கட்டப்பட்டுவிட்டது. ஜம்மு-காஷ்மீரில் சாலைகள், பாலங்கள், சுரங்க வழிகள் அமைப்பதற்காக மட்டும் சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் ரூ.60,000 கோடியில் பணியை மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT