இந்தியா

கர்நாடகத்தில் பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர பரிசீலனை: மத்திய அமைச்சர்

10th Sep 2019 01:17 AM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வர அந்த மாநில அரசு பரிசீலித்து வருவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். ஜோஷி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்; அங்குள்ள தார்வாட் மக்களவை தொகுதி எம்.பி.யாவார்.
கோவா மாநிலம் பனாஜியில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பாஜகவின் பசுப் பாதுகாப்புப் பிரிவினர், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோஷி, கர்நாடகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பசுவதைத் தடைச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்று முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பசுவதை தடைச் சட்டம் உள்ளது. கர்நாடகத்திலும் அதனை அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. மக்களின் உணர்வுகளைப் புரிந்து, மாநில அரசு விரைவில் பசுவதையைத் தடை செய்யும். இந்த விவகாரத்தில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், விரைவில் நல்லதொரு முடிவு எடுக்கப்படும்.
இந்த விஷயத்தில் மகாத்மா காந்தியின் கொள்கையை எங்கள் கட்சி கடைப்பிடிக்கிறது. இந்தியாவில் பசுவதை கூடாது என்பதே மகாத்மா காந்தியின் கொள்கை. இந்த விஷயத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது என்றார்.
பாஜக கூட்டணி அரசு மத்தியில் 100 நாள்களைக் கடந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, கடந்த 100 நாள்களில் மத்திய அரசு பல துணிச்சலான முடிவுகளை எடுத்து சாதித்துள்ளது. தேச நலனுக்கு முக்கியமானது என்று தெரிந்துமே, இதற்கு முன்பு இருந்த அரசுகள் பல முக்கிய முடிவுகளை எடுக்காமல், அரசியல் லாபத்துக்காக சமரசம் செய்து வந்தன. ஆனால், இப்போதைய அரசு தேசநலனைக் கருத்தில் கொண்டு பல முக்கிய முடிவுகளை துணிந்து எடுத்துள்ளது என்றார் பிரகலாத் ஜோஷி.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT