இந்தியா

லட்சோப லட்ச இந்தியர்களின் ஆசைக் கனவு விக்ரம் லேண்டர்.. கண்கலங்கிய தருணம்!

7th Sep 2019 12:22 PM

ADVERTISEMENT

இஸ்ரோ தலைவர் சிவன் சொன்னது போல அந்த கடைசி 15 நிமிடங்கள் அவருக்கு மட்டுமல்ல, விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு இந்தியர்களுக்குமே மிக பதற்றமான நேரமாக இருந்தது.

நிலவின் தரைப் பகுதியில் இருந்து 2.1 கி.மீ. தொலைவில் இருக்கும் போது விக்ரம் லேண்டரிடம் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் படிக்க: சந்திரயான்-2 பின்னடைவு: என்னவாகியிருக்கும் விக்ரம் லேண்டரின் நிலை?

புவி வட்டப் பாதை, புவி வட்டப் பாதையில் இருந்து நிலவை நோக்கியப் பயணம், பிறகு நிலவின் வட்டப் பாதை என சுமார் 48 நாட்கள் 3 கட்டமான பயணங்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, லட்சோப லட்ச இந்தியர்களின் கனவுகளை சுமந்து கொண்டு சென்ற விக்ரம் லேண்டர், ஆர்பிட்டரில் இருந்து பிரிந்து நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நேற்று பின்னடைவை சந்தித்தது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் இருந்து வந்திருந்த 70 மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிகழ்வை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதே சமயம் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை தொலைக்காட்சி வாயிலாக நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த கடைசி நொடியில், விக்ரம் லேண்டர் தனது பாதையில் இருந்து விலகி சற்று சாயும் போது ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயமும் துடிப்பதை நிறுத்தியது என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க: சந்திரயான்-2 திட்டத்துக்கு பின்னடைவு: இறுதி நிமிடத்தில் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிப்பு

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி என்பது ஒரு குழந்தையை கையாள்வது போல என்று சொன்னது அந்த நிமிடம் சட்டென நினைவுக்கு வந்தது. கையில் இருக்கும் பச்சிளம் குழந்தை கைநழுவினால் எந்த அளவுக்கு மனம் பதைபதைக்குமோ அதைத்தான் அந்த நொடி மனம் உணர்ந்தது.

ஆனால் என்ன கையில் இருந்து பிடிநழுவும் அந்த குழந்தையை நம்மால் பிடிக்கமுடியவில்லை. ஏன் என்றால் அது நிலவில் இருந்தது அப்போது.

இந்த திட்டம் வெற்றியோ தோல்வியோ ஆனால், 6 சக்கரங்களைக் கொண்ட விக்ரம் லேண்டர், இஸ்ரோ மற்றும் இந்தியாவின் அசோக சக்ர முத்திரையை நிலவின் தரைப் பகுதியில் நிச்சயம் பதித்திருக்கும் என்றே நிலவைப் பார்த்தபடி இந்தியர்கள் நம்பிக்கையோடு பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

பூமியில் இருந்து 3.8 லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கும் நிலவில் இருந்தபடி விக்ரம் லேண்டரை இந்திய விஞ்ஞானிகள் இயக்கிக் கொண்டிருந்த அந்த நொடி, அறிவியல் மீதும், விஞ்ஞானத்தின் மீதும் இந்தியர்களுக்கும், இந்தியக் குழந்தைகள், இளைஞர்களுக்கும் அதீத பெருமையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அது மிகையில்லை. லேண்டர் வேண்டுமானால் தரையிறங்குவதில் பின்னடைவை சந்தித்திருக்கலாம், ஆனால் இஸ்ரோ மீதான நம்பிக்கை இந்திய மக்களிடையே மிகச் சரியாக லேண்ட் ஆகியிருக்கிறது என்பதை யாருமே மறுக்க முடியாது.

ஓராண்டு காலம் நிலவை சுற்றி படமெடுத்து அனுப்பும் ஆர்பிட்டரும் அந்த நம்பிக்கைக்கு ஒரு மிக முக்கியக் காரணம். 
 

Tags : Vikram Chandrayaan-2 live updates live chandrayaan 2 Chandrayaan-2 moon landing time Chandrayaan-2 landing time Chandrayaan-2 landing live updates
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT