இந்தியா

சந்திரயான்-2 பின்னடைவு: என்னவாகியிருக்கும் விக்ரம் லேண்டரின் நிலை?

7th Sep 2019 11:45 AM

ADVERTISEMENT


நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத் திட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது.

விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சனிக்கிழமை அதிகாலை 1.38 மணியளவில் 1,471 கிலோ கிராம் எடை கொண்ட விக்ரம் லேண்டர் 30 கி.மீ. தொலைவில் ஒரு நொடிக்கு 1,680 மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வரை நிலைமை சரியாக இருந்தது.

மேலும் படிக்க: சந்திரயான்-2 திட்டத்துக்கு பின்னடைவு: இறுதி நிமிடத்தில் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிப்பு

ADVERTISEMENT

அதாவது, நிலவின் தரைப் பகுதியில் இருந்து வெறும் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சிறப்பாக செயல்பட்டு, திட்டமிட்டபடியே சென்று கொண்டிருந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

அதன்பிறகுதான் விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை தரைக்கட்டுப்பாட்டு மையம் இழந்ததாக அவர் அறிவித்தார்.

அதாவது, விக்ரம் லேண்டரை தொடர்ந்து கண்காணித்து வந்த விஞ்ஞானிகள், விக்ரம் தரையிறங்கும் முன்பு திடீரென அது திட்டமிட்ட பாதையில் இருந்து லேசாக விலகியதை உணர்ந்தனர். அதன்பிறகுதான் அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி ஒவ்வொரு இலக்கையும் துல்லியமாக சென்று சேரும் போதெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை அவ்வப்போது பகிர்ந்து கொண்டனர். 

மிகக் கடினமான பாதைகளை எல்லாம் லேண்டர் மிகச் சரியாக திட்டமிட்டபடி கடந்து சென்று கொண்டிருந்தது. கடைசி நிமிடத்தில் அதற்கு என்னவாகியிருக்கும்?

இஸ்ரோ வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ செய்தியில், லேண்டர் தரையிறங்கும் போது எதிர்பாராத வகையில் லேண்டரில் இருக்கும் மிக முக்கிய கருவி நிலவின் தரைப்பரப்பில் பட்டு அணைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மிக வேகமாக லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் மோதியதால், தகவல் தொடர்பை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

ஆனால், இந்த லேண்டர் தரையிறங்கும் திட்டம் தோல்வியடைந்ததால், ரூ.978 கோடி மதிப்பிலான சந்திரயான்-2 திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்ததாகக் கருத முடியாது. சந்திரயான்-2 திட்டத்தின் வெறும் 5 சதவீதப் பணியே லேண்டர் தரையிறங்குவது. அதாவது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றின் பணிகள் வெறும் 5%தான். ஆர்பிட்டர்தான் 95%. அதாவது நிலவைச் சுற்றி புகைப்படம் எடுக்க சந்திரயான்-2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர். அந்த ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாகச் சுற்றி வந்து ஆய்வுகளை செய்து புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது என்று பெயர் கூற விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஐஏஎன்எஸ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் ஆயுட்காலம் ஒரு ஆண்டு. ஒரு ஆண்டு வரை ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வந்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து இஸ்ரோவுக்கு அனுப்பும்.

அதுமட்டுமல்ல, நிலவில் தரையிறங்கும் முயற்சியில் பின்னடைவை சந்தித்திருக்கும் லேண்டரின் நிலை என்னவானது என்பது குறித்தும் இந்த ஆர்பிட்டர் எடுத்தனுப்பும் புகைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்த்துள்ளனர்.

சந்திரயான்-2 விண்கலம் மூன்று முக்கியமான தொகுதிகளோடு நிலவை நோக்கிச் சென்றது. ஒன்று ஆர்பிட்டர் (2,379 கி.கி.) , விக்ரம் (1,471 கி.கி.) பிரக்யான் (27 கி.கி.) ஆகியவையாகும்.
 

Tags : Chandrayaan-2 Chandrayaan-2 landing Chandrayaan-2 news chandrayaan 2 vikram lander vikram lander of chandrayaan 2 Chandrayaan-2 moon landing time
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT