இந்தியா

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

7th Sep 2019 01:16 AM

ADVERTISEMENT


பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனப்படும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (உபா) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் சில திருத்தங்கள் மேற்கொண்டது. அதற்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் 2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. கடந்த மாதம் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தார். 
தனிநபர்களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க புதிய சட்டத் திருத்தம் வழிவகை செய்தது. முன்புவரை, குறிப்பிட்ட அமைப்புகளை மட்டுமே பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்க அச்சட்டத்தில் இடமிருந்தது. 
தனிநபர்களை பயங்கரவாதிகள் என அறிவிப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மனித உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற அரசுசாரா தன்னார்வ அமைப்பு (என்ஜிஓ) சார்பிலும், சஜல் அவாஸ்தி என்பவர் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களில், தனிநபர்களின் வாதங்களைக் கேட்காமல், அவர்களை பயங்கரவாதிகள் என அறிவிக்க வகைசெய்துள்ள சட்டத் திருத்தம், அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு, தனிநபர்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. 
இதனால், குறிப்பிட்ட நபரின் கெளரவத்துக்கும் களங்கம் ஏற்படும். எனவே, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் 35, 36 ஆகிய பிரிவுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. 
இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இந்தப் புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மசூத் அஸார், ஹஃபீஸ் சயீது, லக்வி, அந்நாட்டில் மறைந்து வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் ஆகியோரை பயங்கரவாதிகள் என மத்திய அரசு கடந்த புதன்கிழமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT